மீண்டும் ஒரு மொழி போராட்டம் அரசுக்கு எதிரான கோபத்தை மடைமாற்றும் திட்டமா?
மீண்டும் ஒரு மொழி போராட்டம் அரசுக்கு எதிரான கோபத்தை மடைமாற்றும் திட்டமா?
ADDED : பிப் 20, 2025 12:42 AM
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், தங்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேறாததால், தமிழக ஆட்சியாளர்கள் மீது கோபத்தில் உள்ளனர்.
ஆளும் தி.மு.க., அரசுக்கு எதிராக, அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகின்றன.
இதை மடைமாற்ற, மும்மொழிக் கொள்கை எதிர்ப்பை, தி.மு.க., கையில் எடுத்துள்ளதாகவும், சட்டசபை தேர்தல் வரை, இப்பிரச்னையை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வாக்குறுதி
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கையை ஏற்று, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்' என்ற முக்கியமான வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இதை நம்பி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், தி.மு.க., பக்கம் மொத்தமாக சாய்ந்தனர்.
தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து, நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன. இதுவரை அந்த கோரிக்கை கிடப்பில் உள்ளது. தற்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, அரசு குழு அமைத்துள்ளது.
பல மாநிலங்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திய நிலையில், தமிழக அரசு காலம் கடத்துவதற்காக, இப்படி குழு அமைத்துள்ளதாக, அரசு ஊழியர்கள் கொந்தளிக்கின்றனர்.
அதேபோல், 'அரசு துறைகளில் காலியிடங்களை நிரப்ப வேண்டும்; சரண் விடுப்பை மீண்டும் அமல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த, ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள், அரசை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், போராட்டத்தில் குதித்து உள்ளன.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ ஜியோ' சார்பில், கடந்த 14ம் தேதி, அனைத்து தாலுகாக்களிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பேசிய சங்க நிர்வாகிகள், 'கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய நிலை வரும்' என எச்சரித்துஉள்ளனர்.
மறியல் போராட்டம்
மேலும், வரும் 25ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில், மறியல் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இதேபோல், பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் என பல்வேறு அமைப்புகளும், அடுத்தடுத்து போராட்டங்களை அறிவித்துள்ளன. இது, தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
இதே நிலை நீடித்தால், அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்ற நிலை காணப்படுகிறது. இந்த சூழலில், மத்திய அரசு, 'தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றினால்தான், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு நிதி வழங்க முடியும்' என அறிவித்தது.
இதை வாய்ப்பாக பயன்படுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை மடைமாற்ற முடிவு செய்து, அதற்கான அரசியல் நடவடிக்கைகளில் அரசும், ஆளுங் கட்சியும் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
மத்திய அரசு ஹிந்தியை திணிப்பதாகக் கூறி, ஆளுங் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் பிரசாரத்தை துவக்கியுள்ளன.
தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில், சென்னையில் மத்திய அரசை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, மத்திய அரசு தடையாக உள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்த உதவும் என்பதாலும், மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு திட்டத்தை, தி.மு.க., அரசு கையில் எடுத்துள்ளது.
அரசுக்கு எச்சரிக்கை
இதன் காரணமாக, தமிழகத்தில் நடக்கும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள், போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட விவகாரங்களையும் மறக்கடிக்க முடியும் என்பதால், மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு போராட்டத்தை, வரும் சட்டசபை தேர்தல் வரை, வேகம் குறையாமல் கொண்டு செல்ல, தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.
பா.ஜ., தவிர, மற்ற எந்த கட்சியும், இப்போராட்டத்தை எதிர்க்க முன்வராது என்பதால், அதுவும் அக்கட்சிக்கு சாதகமாகி உள்ளது.
அதை எதிரொலிக்கும் விதமாக, 'மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு கைவிடாவிட்டால், அண்ணாதுரை, கருணாநிதி காலத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை விட, பெரிதாக வெடிக்கும்' என, துணை முதல்வர் உதயநிதி, மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- நமது நிருபர் -