போலீஸ் எஸ்.ஐ., பணிக்கான வயது வரம்பு: உயர்த்த பா.ம.க., வலியுறுத்தல்
போலீஸ் எஸ்.ஐ., பணிக்கான வயது வரம்பு: உயர்த்த பா.ம.க., வலியுறுத்தல்
ADDED : ஏப் 07, 2025 06:08 PM

சென்னை: போலீஸ் எஸ்.ஐ., பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும் என்று பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக போலீசில் 1299 எஸ்.ஐ.,க்களை தேர்ந்தெடுப்பதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை இன்று தொடங்கியிருக்கிறது. காவல்துறைக்கு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்த ஆள்தேர்வு நடத்தப்படாத நிலையில், அதை கருத்தில் கொள்ளாமல் , நடப்பாண்டு ஜூலை ஒன்றாம் தேதியன்று 30 வயதுக்கும் குறைவாக இருப்பவர்கள் மட்டும் தான் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இது சமூகநீதிக்கு எதிரானது ஆகும்.
கடந்த ஆண்டு தொடக்கம் வரை காலியாக இருந்த சார்-ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப 2024 ஜூன் மாதம் ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு மே மாதமே அறிவித்திருந்தது. ஆனால், அறிவித்தவாறு அறிவிக்கை வெளியாகவில்லை.
சார் ஆய்வாளர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கை 10 மாதங்கள் தாமதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கேற்ப வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தால், கடந்த ஜூலை மாதம் 30 வயது நிறைவடைந்திருந்த இளைஞர்கள் ஆள்தேர்வில் பங்கேற்றிருப்பார்கள்.
அந்த வாய்ப்பை கடந்த ஆண்டு பறித்த தமிழக அரசு, இந்த ஆண்டு வழங்கும் வகையில் வயது வரம்பை குறைந்தது ஓராண்டாவது உயர்த்தியிருக்க வேண்டும்.
காவல்துறையின் வலிமையையும், தேர்வர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 33 வயது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 35 வயது, பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு 38 வயதாக உயர்த்த வேண்டும். அதேபோல், தேர்ந்தெடுக்கப்படவுள்ளவர்களின் எண்ணிக்கையை 2000 ஆக உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அன்பு மணி அறிக்கையில் கூறியுள்ளார்.