பேச்சுவார்த்தையில் உடன்பாடு: டாக்டர்கள் போராட்டம் வாபஸ்
பேச்சுவார்த்தையில் உடன்பாடு: டாக்டர்கள் போராட்டம் வாபஸ்
UPDATED : நவ 13, 2024 07:06 PM
ADDED : நவ 13, 2024 01:14 PM

சென்னை: சென்னையில் அரசு டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டத்தை டாக்டர்கள் சங்கம் திரும்ப பெற்றுக் கொண்டது. அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தினர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி டாக்டரை 4 பேர் தாக்கியது தெரிய வந்தது.
'அரசு டாக்டர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளேன்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
இந்நிலையில், அரசு டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அரசு டாக்டர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, அரசு டாக்டர்கள் சங்கத்தினருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், துறை செயலர் சுப்ரியா சாகு, சென்னை போலீஸ் கமிஷனர் அருண், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் டாக்டர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, மருத்துவமனைகளில் பாதுகாப்பு, ரோந்து பணி உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தை டாக்டர்கள் சங்கத்தினர் வாபஸ் பெற்றுக் கொண்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.