ADDED : பிப் 15, 2024 01:38 AM
சென்னை:'முத்தரப்பு ஒப்பந்தத்தால், மின் வாரியம் தனியார்மயமாகும் என்ற தவறான தகவலை நம்ப வேண்டாம்' என, பாரதிய மின் கழக தொழிலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சென்னையில் பாரதிய மின் தொழிலாளர் சம்மேளன சட்ட ஆலோசகர் முரளிகிருஷ்ணன், மாநில பொதுச்செயலர் நடராஜன் நேற்று அளித்த பேட்டி:
கடந்த 2010ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, மின் வாரிய பணியாளர்களின் பணி பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்து, கடந்த 12ம் தேதி மின் வாரியம், அரசு, தொழிற்சங்கங்கள் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
'இந்த ஒப்பந்தத்தால் மின் வாரியம் தனியார்மயமாகும், வாரியத்தை விற்க போகின்றனர், ஓய்வூதியம் கிடைக்காது' உள்ளிட்ட வதந்திகளை, சிலர் பரப்பி வருகின்றனர்.
கடந்த 1995ல் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, 'காட்' ஒப்பந்தத்தின் ஒரு பிரிவு தான் மின் வாரிய மறுசீரமைப்பு. அதன் அடிப்படையில், 2003ல், மத்திய மின் சட்டம் இயற்றப்பட்டது.
அதன் கீழ், அனைத்து மாநில மின் வாரியங்களும், மின் உற்பத்தி, மின் பகிர்மானம் என, தனித்தனி நிறுவனங்களாக உருவாக்கப்பட்டன. அதன்படி, தமிழக மின் வாரியமும், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகங்களாக பிரிக்கப்பட்டன.
கடந்த, 14 ஆண்டுகளாக முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்படாத காரணத்தால், பணியாளர்கள் எவ்வித பணி பாதுகாப்பும் இல்லாத சூழலில் பணிபுரிந்தனர்.
தற்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் வாயிலாக பணி பாதுகாப்பு, ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மின் வாரியம் தனியார்மயமாகும், மின் கட்டணம் உயரும், விவசாய மின்சார மானியம் ரத்தாகும் உள்ளிட்ட தவறான தகவல்களை நம்ப வேண்டாம்.
இவ்வாறு கூறினர்.

