தோட்டக்கலை பணியிடங்கள் பறிக்கப்படாது வேளாண் துறை அதிகாரிகள் திட்டவட்டம்
தோட்டக்கலை பணியிடங்கள் பறிக்கப்படாது வேளாண் துறை அதிகாரிகள் திட்டவட்டம்
ADDED : நவ 21, 2025 11:22 PM
சென்னை: 'நான்கு கிராமத்திற்கு ஒரு அலுவலரை நியமிக்கும் திட்டம் வாயிலாக, தோட்டக்கலை பணியிடங்கள் பறிக்கப்படாது' என, வேளாண் துறை அதிகாரிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிக துறைகளின் சேவைகளை ஒருசேர வழங்குவதற்கு, நான்கு கிராமங்களுக்கு ஒரு விரிவாக்க அலுவலரை நியமிக்கும் அறிவிப்பை, தமிழக அரசு 2021ல் சட்டசபையில் வெளியிட்டது.
இதற்கான அரசாணை, 2023ல் பிறப்பிக்கப்பட்டது. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சட்டசபை அறிவிப்பை செயல்படுத்த வேண்டிய நெருக்கடிக்கு வேளாண் துறை ஆளாகியுள்ளது.
ஆனால், தோட்டக் கலைத் துறையில், 1,550 விரிவாக்க அலுவலர் பணியிடங்கள் ரத்து செய்யப்படும் என்ற தகவல் பரவி வருகிறது. ஆனால், எந்த பணியிடங்களும் ரத்து செய்யப்படாது என, வேளாண் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர், எட்டு முதல் 10 ஊராட்சிகளுக்கும், ஒரு தோட்டக்கலை அலுவலர், 10 முதல் 15 ஊராட்சிகளுக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
எனவே, நான்கு கிராமத்திற்கு ஒரு விரிவாக்க அலுவலர் நியமனம் செய்யப்பட உள்ளார்.
தோட்டக்கலை தொழில்நுட்பங்கள் மட் டுமே தங்களுக்கு தெரியும் என, தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் கூறுகின்றனர். இதனால், எந்த பிரச்னையும் இல்லை.
விவசாயிகள் கேட்கும் தொழில்நுட்ப ஆலோசனைகளை, தங்கள் உயர் அதிகாரிகளிடம் கேட்டு தெரிவிக்கலாம். படிக்காமலே தோட்டக்கலையில், விவசாயிகள் நிபுணத்துவம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு தேவையான சாகுபடி உதவிகளை வழங்கினாலே போதும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலை அலுவலர்கள் அதே துறையில் தொடர்வதுடன், பதவி உயர்வும் பாதிக்காத வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

