தக்காளி மதிப்பு கூட்டும் தொழில்நுட்பம் ஆர்வம் காட்டாத வேளாண் துறை
தக்காளி மதிப்பு கூட்டும் தொழில்நுட்பம் ஆர்வம் காட்டாத வேளாண் துறை
ADDED : செப் 18, 2025 02:49 AM

சென்னை:தக்காளி, மாம்பழம் மதிப்பு கூட்டும் தொழில்நுட்பத்தை செயல்படுத்த, வேளாண் வணிக பிரிவினர் ஆர்வம் காட்டாததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மாம்பழங்களில் இருந்து பழச்சாறு, ஜாம், ஜெல்லி, இனிப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரிக்கலாம். தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திண் டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், 1 லட்சம் ஏக்கருக்கு மேல் தக்காளி சாகுபடி நடந்து வருகிறது. தக்காளியில் இருந்தும் பலவகை பொருட்களை தயாரிக்கலாம்.
இவ்வாறு மதிப்பு கூட்டப்பட்ட மாம்பழம், தக்காளி பொருட்களை வெளிமாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் விற்பனை செய்யலாம். இதன் வாயிலாக, விவசாயிகளுக்கு அதிகளவு வருமானம் கிடைக்கும்.
மதிப்பு கூட்டும் பொருட் களை உற்பத்தி செய்வதற்கு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அ.தி.மு.க., ஆட்சியில் அதிகளவில் துவங்கப்பட்டு உள்ளன. ஆனால், தக்காளி, மாம்பழம் மதிப்பு கூட்டும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த, வேளாண் வணிக பிரிவு வாயிலாக, பெரிய அளவில் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆண்டுதோறும் தக்காளி அதிகளவில் வீணாகி வரும் நிலையில், அதற்கான மதிப்பு கூட்டும் மையத்தை அமைப்பதற்கு, வேளாண் வணிக பிரிவினர் ஆர்வம் காட்டவில்லை. மாம்பழம் மதிப்பு கூட்டும் மையங்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டுமே இயங்கி வருகின்றன.
தக்காளி, மிளகாய், சிறிய வெங்காயம், முருங்கை, மஞ்சள், வாழை, மா, மல்லிகை, சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி ஆகிய வற்றுக்கு, 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 100 இடங் களில் மதிப்பு கூட்டு மையங் கள் அமைக்கப்படும் என, 2024ம் ஆண்டு வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டது. அதை செயல்படுத்த ஆர்வம் காட்டவில்லை.
விவசாயிகள் தொடர் நெருக்கடி காரணமாகவும், அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதாலும், இதற்கான முன்னேற்பாடுகளை வேளாண் துறை இப்போதுதான் துவங்கியுள்ளது. இதனால், விவசாயிகளின் அவதி தொடர்கிறது.
இதுகுறித்து, வேளாண் வணிகப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வேளாண் விளைபொருட்கள் வீணாவதை தடுக்க, 245 இடங்களில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு, 40,364 டன் அளவிற்கு பொருட்களை பதப்படுத்த முடியும்.
மதிப்பு கூட்டும் தொழில்நுட்பத்தை செயல் படுத்த, மாநில அரசு நிதி மட்டுமின்றி, மத்திய அரசு நிதியும் தேவை. இரண்டு நிதிகளும் ஒருங்கிணைத்து கிடைக்கும்பட்சத்தில், அதை தீவிரமாக செயல்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.