'அரசின் திட்டங்களை கண்காணிக்க ஏ.ஐ. தொழில்நுட்பம் உதவுகிறது'
'அரசின் திட்டங்களை கண்காணிக்க ஏ.ஐ. தொழில்நுட்பம் உதவுகிறது'
UPDATED : அக் 11, 2025 07:01 AM
ADDED : அக் 11, 2025 06:58 AM

கோவை : ''தமிழக அரசின் செயல்பாடுகளில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை இணைத்து வருகிறோம்,'' என, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன் பேசினார்.
கோவை, கொடிசியா வளாகத்தில் நடந்த உலக புத்தொழில் மாநாட்டின் 2ம் நாளான நேற்று, அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது:
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, செயற்கை நுண்ணறிவு திட்டத்தை (ஏ.ஐ., மிஷன்) 18 மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. அதில், அரசு செயல்பாடுகளில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தைப் புகுத்துவது முக்கியமானது.
உலகம் முழுதும் நிர்வாகம் மற்றும் ஆட்சியில் பல சவால்கள் உள்ளன. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற, அரசுகள் சிரமத்தை எதிர்கொள்கின்றன. அரசின் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, ஆட்சித்திறனை மேம்படுத்துவது முக்கியம்.
மிகப்பெரிய தரவுகளை வைத்திருப்பது அரசு. பல்வேறு துறைகளின் கீழுள்ள தரவுகளை ஒருங்கிணைத்து, குடிமக்கள் மற்றும் அரசை இணைப்பது ஏ.ஐ., மிஷனின் இலக்கு.
அரசின் பல்வேறு துறைசார்ந்த தரவுகளை, தனியுரிமைபாதிக்காத வகையில், அதேசமயம், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் திறந்த தரவுத் தளமாக மாற்றும் பணி நடக்கிறது.இவ்வகையில், 55 அரசுத் துறைகளின் தரவுகளை ஒருங்கிணைந்து, ஏ.ஐ., திறனாய்வு மையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அரசின் திட்டங்களை கண்காணிக்க ஏ.ஐ., தொழில்நுட்பம் உதவுகிறது.
சுகாதாரம், கல்வி, சாலை பாதுகாப்பு, வேளாண்மை உள்ளிட்ட முக்கிய துறைகளின் தரவுகளை ஒருங்கிணைந்து, பிழைதிருத்தங்கள் செய்துள்ளோம்.இத்தரவுத்தொகுப்புகளை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்பயன்படுத்தி, புதிய தீர்வுகளை உருவாக்க முடியும்.
கல்வித் துறையில் 6ம் வகுப்பு முதல், செயற்கை நுண்ணறிவு காலத்துக்கேற்ற பாடங்கள் சீரமைக்கப்படுகின்றன. ஐ.சி.டி., அகாடமி வாயிலாக, கல்லுாரி மாணவர்கள், பட்டதாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
மருத்துவத் துறையின் தரவுகளைப் பயன்படுத்தி, இ--பார்வை, கோஹா, கல்வித் துறையில் வகுப்பறை, இ-பேராசிரியர் போன்ற தொழில்நுட்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அரசின் பல்வேறு துறைகளில் இருந்து 18 கோடி பதிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, அதில் 4 கோடி தனி நபர்களின் தரவுகள் சீர்செய்யப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் சேவை
அடுத்தகட்டமாக, வாட்ஸ்அப் அடிப்படையிலான அரசு சேவைகள் வழங்கப்பட உள்ளன. தமிழக அரசின் 530 நலத்திட்டங்களில் 370 திட்ட பயனாளிகளின் தரவுகள் ஒருங்கிணைப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக, ஒரு குடும்பம் சராசரியாக 23 அரசுத் திட்டங்களின் கீழ் பயன் பெறுகிறது. 2.3 கோடி குடும்பங்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.