ADDED : அக் 18, 2025 08:03 AM

சென்னை : அ.தி.மு.க., கட்சி துவங்கிய 54ம் ஆண்டு விழா, நேற்று அக்கட்சியினரால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஆண்டு விழாவையொட்டி, கட்சி தலைமை அலுவலக நுழைவாயில், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வந்த கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமிக்கு, அ.தி.மு.க.,வினர் மேளதாளங்கள் முழங்க, உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காலை 9:30 மணிக்கு, தலைமை அலுவலகம் வந்த பழனிசாமி, அங்கிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். அதன்பின் அ.தி.மு.க., கொடியேற்றி, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மேலும், அ.தி.மு.க., சார்பில் வெளியிடப்பட உள்ள, மாதம் இருமுறை இதழான, 'அண்ணா வழி திராவிடம்' என்ற இதழையும் வெளியிட்டார்.