விவசாயிகளுக்கு துரோகம் செய்தது அ.தி.மு.க.,: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!
விவசாயிகளுக்கு துரோகம் செய்தது அ.தி.மு.க.,: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!
ADDED : ஜூன் 11, 2025 02:31 PM

ஈரோடு: ''பயிர்களுக்கு இடையே முளைக்கும் களையாக தான் அ.தி.மு.க., ஆட்சி இருந்தது. எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு துரோகம் செய்த ஆட்சி அது'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் வேளாண் கண்காட்சியைத் தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவின் மஞ்சள் மாநகரமாக விளங்கும் ஈரோடு, வேளாண் வளர்ச்சியில் தமிழக அளவில் 8வது இடத்தில் உள்ளது. தமிழக வரலாற்றில் முதன்முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறோம்.
4 ஆண்டுகளில் உணவு தானிய உற்பத்தியில் 458 லட்சம் மெட்ரிக் டன் எட்டியுள்ளோம். விவசாயிகளால் தான் உணவு கிடைத்து உடல் நலத்தோடு மக்கள் வாழ்கின்றனர். விவசாயிகளால் தான் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆட்சிப் பொறுப்பேற்றதும், வேளாண்மைக்கு உழவர் நலத்துறை எனப் பெயரை மாற்றினோம்.
தோளில் பச்சை துண்டு போட்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் கிடையாது. விவசாயிகளுக்கு ஒரு பிரச்னை எனில் முதல் ஆளாக துணைநிற்பவன் நான் தான். பயிர்களுக்கு இடையே களைகள் முளைக்கும் என்பது விவசாயிகளுக்கு நன்றாக தெரியும். அப்படிப்பட்ட களையாக தான் அ.தி.மு.க., ஆட்சி இருந்தது.
எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு துரோகம் செய்த ஆட்சி அது. ஒவ்வொரு விஷயத்திற்கு நீங்கள் போராடினீர்கள் என்று நினைத்து பாருங்கள். இன்றைக்கு அந்த நிலைமை மாறி இருக்கிறது. கடந்த கால ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை அதிகமானது. மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் அமையும். அதுக்கு உழவர்களை காக்கும் இந்த அரசுக்கு, துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.