'நாம் தமிழர் கட்சிக்கு கூடுதல் ஓட்டு பின்னணியில் அ.தி.மு.க., - பா.ஜ.,'
'நாம் தமிழர் கட்சிக்கு கூடுதல் ஓட்டு பின்னணியில் அ.தி.மு.க., - பா.ஜ.,'
ADDED : பிப் 08, 2025 09:22 PM
புதுக்கோட்டை:''பா.ஜ.,வின் நீதிபதி அணிகள் தான், சார்பு தன்மையோடு திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளித்தது,'' என, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் பகிரங்கமாக குற்றச்சாட்டினார்.
புதுக்கோட்டையில், அவர் அளித்த பேட்டி:
ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. அதே நேரம், நாம் தமிழர் கட்சி கூடுதல் ஓட்டுகளைப் பெற்றுள்ளது. தி.மு.க.,வின் ஓட்டுகளைக் குறைத்துக் காட்ட வேண்டும் என்ற நோகக்தோடு, அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள், நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டளித்துல்ளனர்.
இந்த தேர்தலில், நாம் தமிழர் கட்சி அதிக ஓட்டுகள் வாங்கி விட்டதாக தோற்றத்தை ஏற்படுத்தவே இப்படி செய்துள்ளனர். நடிகர் சீமானின் சமீப கால செயல்பாடுகள் மற்றும் பேச்சுகள் மோசமாக உள்ளது. ஈ.வெ.ரா., குறித்து, அவர் பேசியது ஏற்புடைய கருத்து அல்ல. ஜனநாயத்தை மதிக்கும் கட்சி என்றால், ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிட்டு இருக்க வேண்டும்; புறக்கணித்திருக்க கூடாது.
தேர்தலில் போட்டியிடாமல், ஈ.வெ.ரா., பற்றி கருத்து கூறும் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, அவ்வளவு தைரியமான ஆளாக இருந்தால், அவரே ஈரோடு கிழக்கில் போட்டியிட்டிருக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், 144 தடை உத்தரவு பிறக்கத்திருப்பது தெரிந்துமே, நீதிபதிகள் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளனர். பா.ஜ.,வின் நீதிபதி அணியிடம் அந்த வழக்கை கொண்டு போய்த்தான், ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதியை ஹிந்து அமைப்புகள் பெற்றுள்ளன.
தமிழக வரலாற்றிலேயே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது தெரிந்தும் இது போல, எந்த ஒரு அனுமதியையும் நீதிமன்றம் ஒரே நாளில் எந்த அமைப்பிற்கும் கொடுத்ததில்லை.
மக்களின் மத உணர்வுகளையும், வழிபாட்டு உணர்வுகளையும், சுய அரசியல் லாபத்திற்காக சில அமைப்புகள் பயன்படுத்தி வருகின்றன. மத வழிபாடு என்பது வேறு; மத வெறி என்பது வேறு. மத வழிபாட்டில் உள்ள மக்களை மதவெறிக்காக பயன்படுத்தக் கூடாது.
இவ்வாறு சண்முகம் கூறினார்.

