அ.தி.மு.க., கூட்டத்தில் அடிதடி; ஆய்வுக்கு வந்த 'மாஜி'க்கு அதிர்ச்சி!
அ.தி.மு.க., கூட்டத்தில் அடிதடி; ஆய்வுக்கு வந்த 'மாஜி'க்கு அதிர்ச்சி!
UPDATED : நவ 22, 2024 12:50 PM
ADDED : நவ 22, 2024 12:41 PM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர் மாவட்ட அ.தி.மு.க., ஆய்வுக்கூட்டத்தில், இரு கோஷ்டியினர் மோதிக்கொண்டனர். அடிதடியை கண்டு, ஆய்வுக்கு வந்த முன்னாள் அமைச்சர் வேலுமணி அதிர்ச்சி அடைந்தார்.
திருநெல்வேலி ஜங்ஷனில் அ.தி.மு.க., மாநகர் மாவட்டம் சார்பில் கள ஆய்வு கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கலந்து கொண்டு களஆய்வு கூட்டத்தை நடத்தினார். முன்னாள் மாவட்ட பாப்புலர் வி.முத்தையா, அ.தி.மு.க., திருநெல்வேலி மாவட்டத்தில் படுதோல்வி அடைந்ததை குறித்து பேசிக்கொண்டிருந்தார்.
தேர்தல் வாக்காளர் சரிபார்ப்பு முகாமில் கூட கட்சி நிர்வாகிகள் பங்கேற்காமல் ஒதுங்கிக் கொள்கின்றனர் என குற்றம் சாட்டினார். அப்பொழுதே மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, மைக் அருகே சென்று பாப்புலர் முத்தையாவை கண்டித்தார்.இதையடுத்து, இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. அடிதடி நடந்த நிலையில், வேலுமணி இரு தரப்பினரையும் கண்டித்தார். திருநெல்வேலியில் நீண்ட காலமாக நிலவி வரும் அ.தி.மு.க., பூசல் இன்று வெளிப்படையாக வெடித்து, பரபரப்பை கிளப்பியுள்ளது.