அ.தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர்கள் 82 பேர் நியமனம்: இ.பி.எஸ்., அறிவிப்பு
அ.தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர்கள் 82 பேர் நியமனம்: இ.பி.எஸ்., அறிவிப்பு
ADDED : பிப் 17, 2025 06:24 PM

சென்னை: தமிழகத்தில் பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக, மாவட்ட பொறுப்பாளர்கள் 82 பேரை நியமித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ள இந்த மாவட்ட பொறுப்பாளர்களில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா,செ.ம. வேலுசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி .ராமச்சந்திரன், பச்சைமால், சரோஜா, அன்வர்ராஜா, முன்னாள் எம்.பி., ஜெயவர்தன், முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியன், சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் 21 பேரும், முன்னாள் எம்.பி.,க்கள் 12 பேரும் தற்போதைய எம்.எல் ஏ.,க்கள் நான்கு பேரும், தற்போதைய எம்.பி., தம்பித்துரை ஆகியோரும் முக்கியமானவர்கள்.
இவர்களுக்கு கட்சியில் எவ்வித பொறுப்பும் வழங்கப்படாமல் இருந்தது. வரும் 2026ம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அவர்களை முன்னிலைப்படுத்த, பொறுப்பாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை:2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, சட்டமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைப்பது, வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்தும் பணிகளை, மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து விரைவாக முடிப்பதற்காக, மாவட்ட வாரியாக 82 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பொறுப்பாளர்கள் அனைவரும், உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று, அனைத்துப் பணிகளையும் விரைவாக முடித்து, அதன் விபரங்களை மார்ச் 31ம் தேதிக்குள் தலைமைக் கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழக செயலாளர்களும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.