ஊடகங்கள், பத்திரிகைகளை நம்பி அ.தி.மு.க., இல்லை: சி.வி.சண்முகம்
ஊடகங்கள், பத்திரிகைகளை நம்பி அ.தி.மு.க., இல்லை: சி.வி.சண்முகம்
UPDATED : டிச 15, 2024 01:50 PM
ADDED : டிச 15, 2024 01:31 PM

சென்னை: 'ஊடகங்கள், பத்திரிகைகளை நம்பி அ.தி.மு.க., இல்லை; இரண்டு கோடி தொண்டர்களை நம்பி இருக்கிறது அ.தி.மு.க.,' என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசினார்.
சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடந்த அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது: இந்த பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மண்டபம் அ.தி.மு.க.,வில் பல்வேறு திருப்பங்களை சந்தித்த இடம். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, இந்த இயக்கம் இருக்குமா அல்லது இருக்காதா என்ற இக்கட்டான நிலையில், ஒரு சோதனையான காலக்கட்டத்தில் இந்த இயக்கத்தை வழிநடத்திய இ.பி.எஸ்., சிறப்பான ஆட்சியை கொடுத்தார். அதுமட்டுமல்ல, இதற்கு பிறகு, அ.தி.மு.க., இயக்கம் எதிரிகளால் மட்டும் அல்ல துரோகிகளால் பல இன்னல்களை சந்தித்துள்ளது. கடந்த ஏழரை ஆண்டுகளாக இந்த இயக்கம் பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளது.
தோற்கடிக்க முடியாது
ஆனாலும், எந்த வித சேதாரமும் இல்லாமல், எஃகு கோட்டையாக இன்று இருக்க ஆளுமைமிக்க இ.பி.எஸ்., தான் காரணம். இந்த அரங்கம் தான் இ.பி.எஸ்.,ஐ பொதுச் செயலாளராக தேர்வு செய்த இடம்.அன்று இருந்து இன்று வரை பல்வேறு சோதனைகள் நடந்துள்ளது. நம்மை தோற்கடிக்க யாரும் இல்லை. தோற்கடிக்க முடியாது. நாம் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். நம்பிக்கை தான் வெற்றிக்கு முதல்படி. அந்த நம்பிக்கையை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக தான், இன்று பத்திரிகை, ஊடகங்கள் வாயிலாக இன்றைக்கு நமது மீது மறைமுகமாக, நேரடியாக தாக்குதல்களை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். அதை நாம் ஒரம் கட்ட வேண்டும். பத்திரிகையை நம்பி அ.தி.மு.க., இல்லை. ஊடகத்தை நம்பி அ.தி.மு.க., இல்லை. இரண்டு கோடி தொண்டர்களை நம்பி இருக்கிறது அ.தி.மு.க.
சலசலப்பு வராதா?
அன்றைக்கு இ.பி.எஸ்., ஐ பொதுச்செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்ட போது இருந்த அதே எழுச்சி, அதே ஆரவாரத்துடன் இன்றைக்கும் இருக்கிறது. காது இருந்தும் கேட்காதவர்களே கேளுங்கள், கண் இருந்தும் பார்க்காதவர்கள் நன்றாக பார்த்து கொள்ளுங்கள். இந்த மண்டபத்தில் நிரம்பி இருக்கிற தொண்டர்களை பாருங்கள். எங்கு இருக்கிறது கருத்து வேறுபாடு. எங்கு இருக்கிறது சலசலப்பு. சலசலப்பு வராதா? கருத்து வேறுபாடு வராதா? என்று எண்ணி கொண்டு இருப்பவர்கள் இங்கே பாருங்கள். எழுச்சியை பாருங்கள். இது தான் 2026ம் ஆண்டு இ.பி.எஸ்.,தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் அமையும் என்பதற்கான எடுத்துக்காட்டு. ஆகவே பத்திரிகைகளில் வரும் செய்தியை மறந்து விடுங்கள். படிக்காதீங்க. அவர்கள் உளவியல் ரீதியாக நம்மை பலவீனப்படுத்த பார்க்கிறார்கள். நம்முடைய பலம் நமக்கு தெரியுதோ இல்லையோ, தி.மு.க.,வுக்கு தெரியும்.
தி.மு.க.,வுக்கு தெரியும்
அதிமுக தொண்டனின் பலம் திமுக.,வுக்கு தெரியும். கடைசி தொண்டன் இருக்கும் வரை அ.தி.மு.க.,வை யாராலும் வீழ்த்த முடியாது. எந்த கொம்பன் அல்ல, 100 கருணாநிதி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. இதனால் தான் தொண்டனின் மனதை சோர்வடைய வைக்க வேண்டும் என்பதற்காக தான், பல்வேறு தவறான செய்திகளை பரப்பி கொண்டு இருக்கிறார்கள்.
அ.தி.மு.க., மக்களை நம்பி, மக்களுக்காக பாடுபட்டு கொண்டு இருக்கிறது. இன்றைக்கு இந்த ஸ்டாலின் கனவு கொண்டு இருக்கிறார். அ.தி.மு.க.,வை அழித்துவிடலாம். வழக்குகளை போடலாம். கைது செய்யலாம் என நினைத்து கொண்டு இருக்கிறார். இலங்கையில் ஒரு குடும்ப ஆட்சி நடந்து கொண்டு இருந்தது. ராஜபக்சே குடும்பம். அப்பா, பிள்ளை, அண்ணன். தம்பி, மாமா என குடும்பமே ஆட்சி செய்து கொண்டு இருந்தது. என்ன நிலைமை? இவ்வாறு சி.வி. சண்முகம் பேசினார்.