அரசுக்கு இடைஞ்சல் செய்ய முயலும் அதிமுக: அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு
அரசுக்கு இடைஞ்சல் செய்ய முயலும் அதிமுக: அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு
ADDED : ஜன 09, 2024 01:19 PM

சென்னை: அதிமுக.,வைப் பொறுத்தவரை அரசிற்கு ஒரு இடைஞ்சல் செய்ய வேண்டும், பொங்கல் நேரத்தில் பஸ்கள் ஓடவில்லை என்றால் அரசின் மீது மக்களுக்கு கோபம் வரும் என்று நினைத்துதான் அதிமுக தொழிற்சங்கம் இந்த போராட்டத்தை அறிவித்திருக்கிறது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அமைச்சர் சிவசங்கர் மேலும் கூறியதாவது: தமிழகம் முழுவதும் எந்த பிரச்னையும் இல்லாமல் பஸ்கள் இயக்கப்படுகின்றன; குறித்த நேரத்தில் எல்லா பஸ்களும் மக்களுடைய பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. திருவாரூர் போன்ற சில மாவட்டங்களில் மழையின் காரணமாக தாமதமாக பயணத்தை துவங்கியிருக்கின்றன; முதல்வரின் அறிவுரைப்படி பொதுமக்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பயணிப்பதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகளும், தொழிலாளர்களும் சிறப்பாக ஒத்துழைத்து போக்குவரத்துப்பணி நடைபெறுகிறது.
ஜனவரியில் புதியவர்களுக்கு பணி
அனைத்து இடங்களிலும் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பணியில் இருக்கிறார்கள்; சில இடங்களில் தற்காலிக டிரைவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்; அவர்கள் பஸ் பற்றி அனுபவம் பெற்றவர்கள் தான். போக்குவரத்து தொழிலாளர்களின் 6 அம்சக் கோரிக்கைகளில் 2 நிறைவேற்றப்பட்டுள்ளன; புதிய டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு எழுத்து தேர்வு முடிந்து தற்போது நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது; ஜனவரி மாத இறுதியில் அவர்கள் பணிக்கு கொண்டுவரப்படுவார்கள்; கருணை அடிப்படையில் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கான பணியினை இந்த அரசுதான் வழங்கியது;
அதிமுக
இன்னும் 2 கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதத்தை அறிவித்திருக்கிறேன். 15வது ஊதிய ஒப்பந்தக் கோரிக்கை கடந்த ஆட்சி காலத்தில் பேசி முடிக்கப்பட்டு இருக்க வேண்டும்; 2017ல் அதிமுக ஆட்சியில்தான் 90 ஆயிரம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நிறுத்தினார்கள்; பொருளாதார சுமைகள் அரசுக்கு உள்ளதால்தான் அவகாசம் கேட்கிறோம், அரசு அவகாசம் கேட்ட பின்னும் பொங்கல் நேரத்தில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக.,வைப் பொறுத்தவரை அரசிற்கு ஒரு இடைஞ்சல் செய்ய வேண்டும், பொங்கல் நேரத்தில் பஸ்கள் ஓடவில்லை என்றால் அரசின் மீது மக்களுக்கு கோபம் வரும் என்று நினைத்துதான் அதிமுக தொழிற்சங்கம் இந்த போராட்டத்தை அறிவித்திருக்கிறது; அதிமுக முன்னெடுத்த போராட்டமாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக சி.ஐ.டி.யூ.,வும் போராட்டத்தில் இணந்துள்ளனர்; பொங்கலுக்கு பின்பு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.