அ.தி.மு.க., அவைத்தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்
அ.தி.மு.க., அவைத்தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்
ADDED : டிச 23, 2025 07:40 AM

சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அ.தி.மு.க., அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், 89, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இவர், பித்தப்பை கல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
டாக்டர்கள் ஆலோசனையின்படி வீட்டில் ஓய்வில் இருந்தார். கடந்த 16ம் தேதி வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் உடனடியாக, கீழ்ப்பாக்கத்தில் உள்ள 'அப்பல்லோ பர்ஸ்ட் மெட்' மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு நடத்திய பரிசோதனையில், பித்தப்பை கல், குறைந்த ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பது தெரிய வந்தன. மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து, தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் சிவபிரசாத் ராவ் போபா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்மகன் உசேன் தொற்று காரணமாக, மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில், கடந்த 16ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தேவையான சிகிச்சைகளை டாக்டர்கள் அளித்தனர். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்; விரைவில் வீடு திரும்புவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

