மனோஜ் பாண்டியன் திமுகவில் ஐக்கியம்: எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜினாமா
மனோஜ் பாண்டியன் திமுகவில் ஐக்கியம்: எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜினாமா
UPDATED : நவ 04, 2025 04:58 PM
ADDED : நவ 04, 2025 11:26 AM

சென்னை: அதிமுக ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். அவர் இன்று (நவ., 04)  மாலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினார்..
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மனோஜ் பாண்டியன். இவர் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்தார். இவர் கடந்த சில தினங்களாக கடும் அதிருப்தியில் இருந்து வருவதாக பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த சூழலில் இன்று (நவ., 04) திமுக தலைமை அலுவலகமான அண்னா அறிவாலயத்திற்கு மனோஜ் பாண்டியன் வருகை தந்தார். அவர் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அப்போது அமைச்சர் துரைமுருகனும் உடன் இருந்தார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவை நடத்தி வரும் ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன், சசிகலாவுடன் இணைந்து அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சூழலில் அவரது நெருங்கிய கட்சி நிர்வாகி மனோஜ் பாண்டியன் தற்போது திமுகவில் இணைந்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மனோஜ் பாண்டியன் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கொடுத்தார்.

