ADDED : ஜூன் 03, 2026 02:11 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் ஜெயராமனின் தாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த எம்.எல்.ஏ., வேலுமணியை, துரோகி என கோஷமிட்டதால், சலசலப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஜெயராமனின், தாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்த, நேற்று எம்.எல்.ஏ., வேலுமணி வந்தார். அவரை முன்னாள் அமைச்சர் மற்றும் நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர்.
அப்போது, நிர்வாகி ஒருவர், வேலுமணியை பார்த்து, 'துரோகி' என கோஷமிட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ., மகேந்திரன் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, ஜெயராமன் எச்சரித்ததால், சலசலப்பு ஓய்ந்தது.
அதன் பின், அஞ்சலி செலுத்தும் நிகழ்வு முடிந்த தருணத்தில், கோவையில் இருந்து வந்த நிர்வாகி ஒருவருக்கும், திருப்பூர் மாவட்ட கட்சி நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கோவையில் இருந்து வந்தவர்கள், கோஷமிட்டவரை விட்டு, வேறு சிலரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தால், அ.தி.மு.க.,வினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த நிர்வாகிகள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.
