ADDED : அக் 16, 2025 02:30 AM

சென்னை:சட்டசபையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்ட அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்கள், சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
சட்டசபையில், கரூர் உயிர்பலி சம்பவம் தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசினார். அவர் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பதில் அளித்தனர். இந்த விவாதம் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. ஒரு வழியாக விவாதத்தை முடித்துக் கொள்வதாக கூறிவிட்டு பழனிசாமி அமர்ந்தார்.
அப்போது, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எழுந்து, கரூர் உயிர்பலி சம்பவத்தை, துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் ஒப்பிட்டு, சில கருத்துகளை தெரிவித்தார். இதற்கு, அ.தி.மு.க.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திடீரென தன் இருக்கையில் இருந்து எழுந்த பழனிசாமி, சபாநாயகர் இருக்கைக்கு முன் சென்று அமர்ந்தார்.
அவரை தொடர்ந்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவராக அவரது பின்னால் அமர்ந்தனர். சபை குறிப்பில் இருந்து, அமைச்சர் கூறியதை நீக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து கோஷம் போட்டால், சபையில் இருந்து வெளியேற்ற நேரிடும் என சபாநாயகர் எச்சரித்தார். எந்த வார்த்தையை நீக்க வேண்டும் என குறிப்பிட்டு சொன்னால், அதை சபை குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் உறுதியளித்தார்.
இதை ஏற்காமல், அ.தி.மு.க.,வினர் கோஷங்கள் எழுப்பினர். சபாநாயகர் பலமுறை எச்சரித்தும், அவர்கள் போராட்டத்தை கைவிடாததால், அவர்களை வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
சபைக்குள் காவலர்கள் வந்ததும், பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும் ஒவ்வொருவராக கோஷமிட்டபடி வெளியேறினர். இதனால், அங்கு 10 நிமிடங்களுக்கு மேல் பரபரப்பு நிலவியது.