போலி உறுப்பினர்கள் சேர்த்ததாக கூறிய அ.தி.மு.க., வட்ட செயலர் நீக்கம்
போலி உறுப்பினர்கள் சேர்த்ததாக கூறிய அ.தி.மு.க., வட்ட செயலர் நீக்கம்
ADDED : பிப் 06, 2025 09:45 PM
சென்னை:போலி உறுப்பினர்களை சேர்த்ததாக பேட்டியளித்த, மதுரை, ஜவஹர்புரம் அ.தி.மு.க., வட்டச் செயலர் உதயகுமார் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'அ.தி.மு.க., கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி, களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதால், மதுரை மாநகர் மாவட்டம், ஜவஹர்புரம் வட்டச் செயலர் உதயகுமார், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார்' என தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை குறித்து பேட்டியளித்த உதயகுமார், 'உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக பகுதி செயலர் கணேசன், ஒவ்வொரு வட்டத்திற்கும் இலக்கு நிர்ணயித்துள்ளார். 2,100 உறுப்பினர்களை சேர்த்துள்ளேன். அதில், 1,400 உறுப்பினர்களை போலியாக சேர்த்துள்ளோம். பகுதி செயலர் நல்ல பெயர் வாங்குவதற்காக, வட்ட செயலர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார். இதை சொல்வதால் என்னை நீக்கினாலும் கவலைப்பட மாட்டேன்' என கூறியிருந்தார்.