பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் அ.ம.மு.க., இணையாது: தினகரன் திட்டவட்டம்
பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் அ.ம.மு.க., இணையாது: தினகரன் திட்டவட்டம்
ADDED : நவ 16, 2025 12:40 AM

சென்னை: 'பழனிசாமி தலைமையிலான கூட்டணிக்கு, அ.ம.மு.க. செல்லும் என்ற பேச்சுக்கே இடமில்லை'. என, தினகரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
அ.ம.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை அடையாறில் உள்ள, கட்சியின் தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்தது. கட்சி பொதுச் செயலர் தினகரன் பங்கேற்று, சட்டசபை தேர்தல் தொடர்பாக, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் எதிரொலிக்கும் என, நான் நம்பவில்லை. சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, தமிழக அரசு பணியாளர்களே மேற்கொள்கின்றனர்.
அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் ஒருங்கிணைந்து, அதை சிறப்பாக செய்ய வேண்டும்.
அ.ம.மு.க., எனும் கட்சி துவங்கியதே, பழனிசாமியின் துரோகத்துக்கு எதிராகத்தான். அதனால், அவருடைய தலைமை ஏற்றுக் கொண்டு, நாங்கள் கூட்டணிக்கு செல்வோம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒருவேளை, பழனிசாமியே விரும்பினாலும், அதை நாங்கள் ஏற்க மாட்டோம்.
எங்களுடன் சில கட்சிகள், கூட்டணி பேச்சு நடத்துகின்றன. ஓரிரு மாதங்களில், அது முடிவுக்கு வரும். என்னுடன் யார் பேசுகின்றனர் என்பதை, இப்போது சொல்ல முடியாது; அது நாகரிகம் அல்ல.
வரும் சட்டசபை தேர்தலில், ஆளும் தி.மு.க., கூட்டணிக்கும், த.வெ.க. கூட்டணிக்கும் இடையேதான், கடுமையான போட்டி நிலவும். கடந்த 2021 தேர்தலில், யார் ஆட்சிக்கு வரக்கூடாது என, நாங்கள் நினைத்தோமா, அது நடந்தது. அதேபோல், இந்த முறையும், எங்களின் முதல் இலக்கு பழனிசாமிதான்.
தமிழக பா.ஜ.வில், நாகேந்திரன் உட்பட யாரிடமும், நான் தொடர்பில் இல்லை. அண்ணாமலை மட்டும் நட்பின் அடிப்படையில் அவ்வப்போது பேசுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

