சாலையோர வியாபாரிகளிடம் கப்பம்; கவுன்சிலர்களுக்கு ஏ.ஐ.டி.யு.சி., எச்சரிக்கை
சாலையோர வியாபாரிகளிடம் கப்பம்; கவுன்சிலர்களுக்கு ஏ.ஐ.டி.யு.சி., எச்சரிக்கை
UPDATED : பிப் 07, 2024 04:57 AM
ADDED : பிப் 07, 2024 01:31 AM

திருப்பூர்:'மாநகராட்சி கவுன்சிலர்கள், கப்பம் வசூலிப்பதை நிறுத்திக்கொள்ளாவிட்டால், பகிரங்கமாக பெயரை வெளியிடுவோம்,' என, ஏ.ஐ.டி.யு.சி., எச்சரித்துள்ளது.
தமிழக அரசு, சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, 2015ல் சட்டம் இயற்றியுள்ளது. இருப்பினும், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள், அதனை நிறைவேற்றவில்லை. மாவட்டத்தில் உள்ள, சாலையோர வியாபாரிகளுக்கு, 'ஸ்மார்ட்' அடையாள அட்டை வழங்கியிருக்க வேண்டும்.
தேர்தல் மூலமாக வணிகக்குழு அமைத்து, ஐந்தாண்டுக்கு ஒருமுறை புதிய நிர்வாகிகள் தேர்வாக வேண்டும். தொழிற்சங்க ஒத்துழைப்புடன், வங்கிகள் மூலமாக கடன் உதவி வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகள், இரவில் பொருட்களை பத்திரமாக வைக்க, இடவசதி செய்து கொடுக்க வேண்டும்.
பேரூராட்சி, கிராம ஊராட்சிகளிலும், சாலையோர வியாபாரிகளுக்கான சட்ட விதிகளை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகராட்சி அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட பொதுசெயலாளர் நடராஜன், மாநில செயலாளர் சேகர், மாவட்ட தலைவர் மோகன், மாவட்ட பொதுசெயலாளர் ரவி உள்ளிட்டோர் பேசினர்.
நிர்வாகிகள் பேசுகையில், 'சாலையோர வியாபாரிகளுக்கான நலத்திட்டங்களை, அனைத்து உள்ளாட்சிகளும் செயல்படுத்த வேண்டும். திருப்பூர் மாநகராட்சி பகுதியில், ரோட்டோர வியாபாரிகளிடம், மாநகராட்சி கவுன்சிலர், ஆளும்கட்சியினர் கப்பம் வசூலிப்பது அதிகரித்துவிட்டது. சாலையோர வியாபாரிகள் உழைத்து சம்பாதிப்பதை பிடுங்க பார்க்கின்றனர்.
இனியும் மாநகராட்சி கவுன்சிலர்கள் கப்பம் வசூலிப்பதை நிறுத்திக்கொள்ளாவிட்டால், பகிரங்கமாக பெயர்களை வெளியிடுவோம்,' என்றனர்.

