போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித் குமார்; தம்பிக்கு அரசு பணி, வீட்டு மனை பட்டா வழங்கியது அரசு!
போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித் குமார்; தம்பிக்கு அரசு பணி, வீட்டு மனை பட்டா வழங்கியது அரசு!
ADDED : ஜூலை 02, 2025 11:34 AM

சென்னை: திருப்புவனத்தில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
போலீசார் விசாரணையில், இறந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று நேரில் ஆறுதல் கூறினார்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் பெரியகருப்பன் மொபைல் போனில் தொடர்புகொண்ட முதல்வர் ஸ்டாலின், அஜித்குமாரின் தாய் மாலதிக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது முதல்வர், 'ரொம்ப சாரிம்மா; தைரியமா இருங்க. எனக்கு ரொம்ப வருத்தம் தான்' என்றார். இதை தொடர்ந்து, அஜித்குமாரின் சகோதரர் நவீனிடம் பேசிய முதல்வர், 'நடக்கக்கூடாதது நடந்து விட்டது; தைரியமாக இருங்கள் என தெரிவித்தார். இந்நிலையில் இன்று (ஜூலை 02) அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது: அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தி.மு.க., சார்பில் முதற்கட்டமாக ரூ.5 லட்சம் வழங்கி உள்ளோம்.
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் விரைந்து விசாரித்து ஞானசேகரனுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தது போல இளைஞர் அஜித்குமாரின் வழக்கிலும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.