போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த வழக்கு; திருப்புவனத்தில் சி.பி.ஐ., விசாரணை!
போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த வழக்கு; திருப்புவனத்தில் சி.பி.ஐ., விசாரணை!
UPDATED : ஜூலை 19, 2025 07:26 PM
ADDED : ஜூலை 19, 2025 05:02 PM

திருப்புவனம்: போலீஸ் விசாரணையில், இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, திருப்புவனத்தில் மடப்புரம் கோவில் வளாகத்திற்கு பின்புறம் உள்ள கோ சாலை மற்றும் அஜித் குமார் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் ஜூன் 28ல் போலீசார் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., போலீசார் இன்று (ஜூலை 19) மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
நேற்று மதுரையில் கோவில் ஊழியர்கள் கார்த்திக் வேலு, பிரவீன், உள்ளிட்டோர் இடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று ( ஜூலை 19) திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில், 5 கார்களில் வந்த 10 பேர் கொண்ட சி.பி.ஐ., குழு விசாரணை நடத்தியது.
அஜித் குமாரின் தம்பி நவீன்குமார், வினோத் , பிரவீன், ஆட்டோ டிரைவர் அருண் ஆகியோரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்தனர். அஜித்குமாரின் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பின்னர், அஜித் குமாரை போலீசார் உணவு வாங்கி கொடுக்க அழைத்து சென்ற இடம் மற்றும் மடப்புரம் கோவில் வளாகத்திற்கு பின்புறம் உள்ள கோ சாலையில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.