அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு; 20 காளை அடக்கிய அபிசித்தர் முதலிடம்
அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு; 20 காளை அடக்கிய அபிசித்தர் முதலிடம்
UPDATED : ஜன 16, 2025 10:29 PM
ADDED : ஜன 16, 2025 08:12 AM

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 20 காளைகளை அடக்கிய பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் முதலிடம் பெற்றார். காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார்.
உலகளவில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுக்களில் ஒன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. அவனியாபுரம், பாலமேட்டை தொடர்ந்து, இன்று(ஜன., 16) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்.
இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் அலங்காநல்லூரில் குவிந்தனர்.
வாடிவாசலில் இருந்து பாய்ந்து வரும் காளைகளை, வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கினர். போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர், காளைக்கு, கார், டிராக்டர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பால் வீரர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கினர்.கடைசி சுற்று முடிவில், 20 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் என்ற வீரர் முதலிடம் பெற்றார். 14 காளை அடக்கிய பொதும்பு கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் இரண்டாமிடம், 10 காளை அடக்கிய விக்னேஷ் மூன்றாம் இடம் பெற்றனர்.
போட்டியில் பங்கேற்ற வீரர்கள் உட்பட 70 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 11 பேர் மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காளை முட்டியதில் காயம் அடைந்த பார்வையாளர் மேட்டுப்பட்டியை சேர்ந்த பெரியசாமி என்பவர் உயிரிழந்தார்.
இன்று நடிகர் சூரி சார்பில் அவிழ்த்து விடப்பட்ட 3 காளைகளையும் எந்த வீரர்களாலும் அடக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.சிராவயல் மஞ்சு விரட்டு!
சிவகங்கை மாவட்டம் சிராவயலில் இன்று மஞ்சு விரட்டு நடந்தது. இதில் காளை அடக்க முயற்சித்த வீரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். வீரர்கள் 177 பேர் காயம் அடைந்தனர்.