ADDED : ஜன 13, 2024 04:55 AM

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜன.15ல் அவனியாபுரத்தில் துவங்குகிறது. ஜல்லிக்கட்டுக்காக அலங்காநல்லுார் அருகே கீழக்கரையில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட அரங்கத்தை இம்மாத இறுதியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அங்கு தொடர்ந்து 5 நாட்கள் போட்டிகள் நடக்க உள்ளது.
தமிழகத்தின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தைப் பொங்கல் துவங்கி தொடர்ந்து நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஜன.15ல் மதுரை அவனியாபுரத்தில் துவங்கி, ஜன.16 பாலமேடு, ஜன.17 அலங்காநல்லுாரில் நடக்க உள்ளது.
இதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் காளைகள், காளையர்கள் தயாராகி வருகின்றனர். பங்கேற்கும் காளைகள், காளையர் பதிவு ஆன்லைன் மூலம் நடந்தது. பல ஆயிரம் காளைகள், வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு செய்யப்படும் சிறந்த காளையின் உரிமையாளர், சிறந்த மாடுபிடி வீரருக்கு தலா ஒரு கார் பரிசு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி சார்பில் வழங்கப்பட உள்ளது.
ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக ரூ.45 கோடி செலவில் நவீன வசதிகளுடன் தனி அரங்கத்தை தமிழக அரசு அலங்காநல்லுார் அருகே கீழக்கரையில் அமைத்து வருகிறது. இதற்கான பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. அமைச்சர் எ.வ.வேலு வாரம் ஒருமுறை அப்பணிகளை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து 95 சதவீதத்திற்கும் மேலான பணிகள் முடிந்துவிட்டன.
பொங்கலுக்கு முன் திறப்பு விழா நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில் விழா இம்மாத இறுதிக்கு தள்ளிப் போகிறது. இந்த ஜல்லிக்கட்டு அரங்கம் இம்மாத இறுதிக்குள் முதல்வரால் திறந்து வைக்கப்படும். துவக்க விழாவின்போது 5 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.