'மது ஒழிப்பு குறித்து பேச தகுதியான கட்சி பா.ம.க., தான்'
'மது ஒழிப்பு குறித்து பேச தகுதியான கட்சி பா.ம.க., தான்'
ADDED : செப் 13, 2024 04:43 AM

திண்டிவனம்: ''மதவாத கட்சியான பா.ஜ., மற்றும் சாதியவாத கட்சியான பா.ம.க., ஆகிய கட்சிகள், வி.சி., நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அனுமதி இல்லை என்று திருமாவளவன் கூறியிருக்கிறார். அது அவருடைய கருத்து; ஆனால், அவருக்கெல்லாம் முன்பாகவே பா.ம.க., தான் தொடர்ந்து மது ஒழிப்பை வலியுறுத்தி போராடி வருகிறது,'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
நேற்று தைலாபுரம் தோட்டத்தில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் மது ஒழிப்பு குறித்து பேசுவதற்கு மிகவும் தகுதியான கட்சி பா.ம.க.,தான். கடந்த 44 ஆண்டுகளாக பூரண மதுவிலக்கு வேண்டி பா.ம.க., போராடி வருகின்றது.
கடந்த 35 ஆண்டுகளில் 32 மாவட்டங்களில் மதுவை ஒழிக்கும் வகையில் மகளிர் மாநாட்டை நடத்தியுள்ளோம். இதில் அனைத்து சமுதாய தவைர்களை அழைத்தோம். முதல்வராக இருந்த கருணாநிதியை சந்தித்து, மது ஒழிப்பை அமல்படுத்த கோரிக்கை வைத்தேன். தமிழகத்தில் டாஸ்மாக் துவக்கி, 7,200 கடைகள் திறக்கப்பட்டன. அவற்றை 6,800 கடைகளாகக் குறைத்த பெருமை பா.ம.க.,வை சேரும்.
உச்ச நீதிமன்றம் வரை போராடி, தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் 3321 மதுக்கடைகளை மூட வைத்தது பா.ம.க.,தான். டாஸ்மாக் நேரம் காலை 8.00 முதல் இரவு 12.00 மணி வரை 16 மணி நேரமாக இருந்ததை, 10 மணி நேரமாகக் குறைத்ததும் பா.ம.க.,தான்.
கடந்த 2016ல், பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு என அறிவித்த பின்னரே, தி.மு.க., உள்ளிட்ட பிற கட்சிகள் அதை அறிவித்தன. இவ்வாறு அவர் கூறினார்.