குடிக்காதவர்களை வி.சி.,க்களுக்கு பிடிக்காது: ஹெச்.ராஜா
குடிக்காதவர்களை வி.சி.,க்களுக்கு பிடிக்காது: ஹெச்.ராஜா
ADDED : செப் 13, 2024 04:45 AM

மதுரை : ''குடிக்காதவர்களை வி.சி.,க்களுக்கு பிடிக்காது; அதனாலேயே மது ஒழிப்பு மாநாட்டுக்கு பா.ஜ.,வுக்கு அழைப்பில்லை,'' என தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா கூறினார்.
மதுரையில் அவர் அளித்த பேட்டி:
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அக்., 2ல் கள்ளக்குறிச்சியில் நடத்தவிருக்கும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு பா.ஜ.,வைத் தவிர வேறு எல்லா கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
குடிக்காதவர்கள் என்றால் அவர்களுக்குப் பிடிக்காது. அதோடு, குடிக்காதவர்கள் இருக்கும் கட்சியும் அவர்களுக்கு பிடிக்காது. அந்த வகையில்தான், பா.ஜ.,வை மாநாட்டுக்கு அழைக்க வேண்டாம் என முடிவெடுத்து, எங்களை தவிர்த்துள்ளனர். எப்படியோ மாநாடு வெற்றி பெற்று, மது ஒழிப்பு அமலுக்கு வந்தால் சரிதான்.
தன்னம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு ஏதோ கொலைக்குற்றம் செய்தவர் போல, அவரை அரசும் காவல் துறையும் நடத்துகிறது. தவறு செய்யாத அவரை சிரமப்படுத்துவதில் அப்படியென்ன அலாதி இன்பம் என தெரியவில்லை.
நடிகர் விஜய் எந்த கொள்கையோடு அரசியலுக்கு வருகிறார் என்பது குறித்து யாருக்கும் முழுமையாகத் தெரியாது. அதைச் சொன்னால்தான், ஆதரவு வருமா... எதிர்ப்பு வருமா என்பது தெரியும்.
பா.ஜ.,வின் கொள்கை 'ஊழல் இல்லாத அரசியல்; பொது வாழ்வில் துாய்மை' என்பது. ஆனால் விஜய், 'நீட்' எதிர்ப்பு, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்கிறார். இதைத்தான் திராவிட இயக்கங்களும் சொல்லி வருகின்றன. அந்த வகையில் பார்க்கையில், அவர் பெறப்போகும் ஓட்டுகள், திராவிட இயக்க ஓட்டுகள்தான். இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.

