'இன்ஸ்டாகிராமில்' பரப்பப்படும் மதுபான விளம்பரங்கள்
'இன்ஸ்டாகிராமில்' பரப்பப்படும் மதுபான விளம்பரங்கள்
ADDED : செப் 09, 2026 04:31 AM

சென்னை : 'இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், பிரபல மதுபான நிறுவனங்களின் நேரடி விளம்பரங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகளில் மதுபானங்களை விளம்பரப்படுத்த, மத்திய அரசு தடை விதித்துள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் விதி முறைகளின்படி, எந்தவொரு ஊடகத்திலும் மதுபானங்களை நேரடியாக விளம்பரப்படுத்துவதோ அல்லது அதே 'பிராண்ட்' பெயரை கொண்டு சோடா, 'மினரல் வாட்டர்' அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் போல் மறைமுக விளம்பரங்களை செய்வதோ முற்றிலும் சட்டவிரோதம்.
ஆனால், சமூக வலைதளங்களில் உள்ள தளர்வுகளை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பல மதுபான நிறுவனங்கள், இந்தச் சட்ட வரம்புகளை மிகத் தந்திரமாக மீறி வருகின்றன.
குறிப்பாக, 'இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், ஸ்டோரி'கள் பயன்படுத்தி, மிக எளிமையாக மதுபானங்கள் விளம்பரப்படுத்தப்படுகின்றன.
இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நிலவும் வயது வரம்பு கட்டுப்பாடுகள், பல இடங்களில் பெயரளவிற்கு மட்டுமே பின்பற்றப்படுவதால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், சிறுவர்களும், இந்த கவர்ச்சிகரமான விளம்பரங்களை எளிதில் பார்க்க முடிகிறது.
இது குறித்து, நுகர்வோர் உரிமை ஆர்வலர் கார்த்திகேயன் கூறியதாவது:
பாரம்பரிய ஊடகங்களில் இருக்கும் கட்டுப்பாடுகள், சமூக வலைதளங்களுக்கு முறையாக விரிவுபடுத்தப்படாததை, மதுபான நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன.
இன்ஸ்டாகிராமில் உலா வரும் இது போன்ற கவர்ச்சிகரமான ரீல்ஸ்கள் வாயிலாக, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் எளிதில் திசை திருப்பப்பட்டு, மதுப் பழக்கத்திற்கு அடிமையாகும் ஆபத்து அதிகரித்து வருகிறது.
விளம்பரதாரர்களுக்கு மத்திய அரசு விதிக்கும் அபராதங்களை கடுமையாக்க வேண்டும். சமூக வலைதள நிறுவனங்களே முன்வந்து, இது போன்ற சட்டவிரோத கணக்குகளை முடக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
