தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்; முதல்வரிடம் பிரதமர் உறுதி
தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்; முதல்வரிடம் பிரதமர் உறுதி
UPDATED : டிச 03, 2024 11:09 AM
ADDED : டிச 03, 2024 10:59 AM

சென்னை: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
பெஞ்சல் புயல் கரையைக் கடந்தபோது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ., வேகத்தைத் தொட்டதால், சாலைகள் மற்றும் மின் இணைப்புகள் கடுமையாக சேதமடைந்தன. தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட உள் மாவட்டங்களில் கனமழை மற்றும் சேதம் ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 2,000 கோடி ரூபாய் வழங்கக்கோரி, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இந்நிலையில், இன்று (டிச.,03) பெஞ்சல் புயல் பாதிப்புகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். அப்போது, புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.