கல்வித்தரத்தை மேம்படுத்தவே ஆல் பாஸ் ரத்து: அண்ணாமலை
கல்வித்தரத்தை மேம்படுத்தவே ஆல் பாஸ் ரத்து: அண்ணாமலை
UPDATED : டிச 24, 2024 10:25 PM
ADDED : டிச 24, 2024 05:06 PM

சென்னை: '' கல்வியின் தரத்தை மேம்படுத்தவே ஆல் பாஸ் முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது'', என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: ஆல் பாஸ் திட்டம் ரத்து குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது. கல்வியின் தரத்தை மேம்படுத்தவே மத்திய அரசு ஆல் பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மாணவர்களின் கல்வித்தரம் பின் தங்கி உள்ளது என ஆய்வறிக்கை சொல்கிறது. 5ம் வகுப்பில் 72 சதவீத மாணவர்களுக்கு வகுத்தல் கணக்கு தெரியவில்லை. 10ம் வகுப்பு மாணவர்களில் 2 சதவீதம் பேர் மட்டுமே அறிவியல் பாடத்தில் சிறந்து விளங்குகின்றனர்.
இந்தியாவை பொறுத்தவரை கல்வி தரத்தை உயர்த்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. மாணவர்கள் அனைவரையும் வகுப்பறையில் அமர வைத்தேன். பாஸ் செய்ய வைத்தேன். பத்தாம் வகுப்பு வரை அனுப்பி வைத்தேன். இதை சொல்வது பெருமையாக இருந்தாலும், அது 1980களில் தேவைப்பட்டது. 2024ல் அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு வர வேண்டும். அடிப்படையாக படிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
மாநில அரசு ஆல் பாஸ் முறையை நடைமுறைபடுத்தவில்லை என்றால் நடைமுறைபடுத்தாமல் இருக்கலாம். மத்திய அரசை பொறுத்தவரை ஒரு காரணத்திற்காக கொண்டு வந்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தாய்மொழி, ஆங்கிலம், கணக்கு அறிவியல் கற்றலில் பிரச்னை உள்ளது.இதற்கு அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். எங்களுக்கு பணம் குறைவாக கொடுத்தார்கள். அதனால், இண்டர்நெட் பில் கட்டவில்லை.வரி அதிகம் கொடுத்தோம். அதனை குறைவாக திருப்பித் தருகிறார்கள் என கதை சொல்கிறார்கள்.
இண்டர்நெட் பில் கட்டாமல் இருந்திருந்தால், இன்று உண்டியல் போராட்டம் நடத்துவதாக முடிவு செய்து இருந்தோம்.
பா.ஜ., அலுவலக கட்டட திறப்பு விழாவிற்கு மத்திய உள்துறை அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். தேதி இன்னும் முடிவாகவில்லை. விஜயகாந்த் முதலாம் ஆண்டு குருபூஜைக்கு அழைப்பு விடுத்தனர். கட்டாயம் நாங்கள் கலந்து கொள்கிறோம்.
பிரதமர் மோடி - எம்ஜிஆர் ஓப்பீடு குறித்து எனது கருத்து தொடர்பாக அ.தி.மு.க.,வின் மூத்த தலைவர்கள் என்னை தொடர்பு கொண்டு பேசினர். வாட்ஸ் அப் - செயலியில் செய்தி அனுப்பினர். இந்த ஒப்பீடு சரியானது என்கின்றனர். எம்.ஜி.ஆர்., பாரதத்தின் ரத்னா. அ.தி.மு.க.,வின் ரத்னா கிடையாது. அவர் குறித்து பேச அனைவருக்கும் உரிமை உள்ளது. பிரதமர் மோடிக்கு சவுதி அரேபியா சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கிறது.
அமைச்சர் செந்தில்பாலாஜி, ஜோதிமணி எனக்கு உறவினர்கள் தான். ஒரே கோவிலுக்கு செல்கிறவர்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.