பேச்சு, பேட்டி, அறிக்கை: டாஸ்மாக் கடைகள் எல்லாமே பொதுமக்களுக்கு அச்சுறுத்தலா தான் இருக்குது!
பேச்சு, பேட்டி, அறிக்கை: டாஸ்மாக் கடைகள் எல்லாமே பொதுமக்களுக்கு அச்சுறுத்தலா தான் இருக்குது!
ADDED : மார் 05, 2024 12:35 AM

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
வேலுார் மாவட்டம், காகிதப்பட்டறை பகுதியில், ஒரே தெருவில் இயங்கும் ஆறு மதுபானக் கடைகளால், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் அதிகரிக்கின்றன. பொதுமக்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் மதுபானக் கடைகளை அகற்ற, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இயங்கி வரும் மதுபானக் கடைகளை கணக்கெடுத்து, அவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுக்க உள்ள டாஸ்மாக் கடைகள் எல்லாமே, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலா தான் இருக்குது!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு வருவாய் வளர்ச்சி, தமிழகத்தில் 10 சதவீதத்துக்கும் குறைவு என, புள்ளி விபரங்கள் தெளிவாக்குகின்றன. கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்கள், இந்த ஆண்டு நம்மை விட இரு மடங்கு அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளன. இதே நிலை நீடித்தால், இன்னும் சில ஆண்டுகளில், ஹரியானா, உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள், தமிழகத்தை முந்தி செல்ல வாய்ப்புள்ளது.
ஹரியானாவும், உ.பி.,யும் உங்க கட்சி ஆட்சி நடக்கிற மாநிலங்கள் தானே... முந்திட்டு போனா போகட்டும்னு பிரீயா விடுங்க!
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை:
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், கற்றல் குறைபாடு உள்ள மாணவர்கள் தேர்வு எழுத, ஆசிரியர் ஒருவர் துணைக்கு அமர்த்தப்படுகிறார். இது நல்ல ஏற்பாடு. ஆனால், துணையாக அமர்த்தப்பட்ட ஆங்கிலம் உள்ளிட்ட பிற பாட ஆசிரியர்களால், தமிழ் பாடத் தேர்வை சரிவர எழுத முடியவில்லை என, மாணவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, ஒவ்வொரு பாடத்திற்கும் தேர்வெழுத, அந்த பாடத்தை அறிந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
இந்த சின்ன யோசனை கூட, நம்ம கல்வி துறை அதிகாரிகளுக்கு வராமல் போனது ஏன்?
தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு:
இந்திரா எமர்ஜென்சியை கொண்டு வந்தபோது பயந்து போய், ஜனசங்கம் என்ற தங்கள் கட்சியை கலைத்தவர்கள் தான் பா.ஜ.,வினர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை வைத்திருந்த எம்.ஜி.ஆரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என மாற்றினார். ஆனால், எமர்ஜென்சி காலத்திலும் தி.மு.க., பெயரை மாற்ற மாட்டேன் என, கருணாநிதி கூறினார்.

