காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் உறுதி: விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி
காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் உறுதி: விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி
ADDED : செப் 24, 2025 08:18 AM

சென்னை: 'காஞ்சிபுரம் டி.எஸ்.பி.,க்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி, தொடர்ந்து அதே இடத்தில் பணிபுரிவது உகந்ததாக இருக்காது' என, தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அவர் மீது நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் விசாரணை அறிக்கையை, உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் கொண்ட விஜிலன்ஸ் குழுவுக்கு அனுப்பும்படி உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் காவலராக பணிபுரிபவர் லோகேஷ்வரன் ரவி. அவரது மாமனார் சிவகுமார். இவர், பூசிவாக்கம் கிராமத்தில், 'பேக்கரி' கடை நடத்தி வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகனுக்கும் இடையே, கடந்த ஜூலையில் தகராறு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், சிவகுமாரின் மருமகனான லோகேஷ்வரனும், முருகனிடம் தகராறில் ஈடுபட்டார். இதுதொடர்பாக வாலஜாபாத் போலீசில், சிவகுமார், லோகேஷ்வரன் ரவி உட்பட, நான்கு பேர் மீது புகார் அளிக்கப்பட்டது.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், அவர்கள் கைது செய்யப்படவில்லை. இதையடுத்து, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செம்மல், இவ்விவகாரத்தில் டி.எஸ்.பி., சங்கர் கணேஷை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவுகளுக்கு எதிராக, போலீஸ்காரர் லோகேஷ்வரன் ரவி, காஞ்சிபுரம் எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி., சங்கர் கணேஷ் மற்றும் வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், டி.எஸ்.பி.,யை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவு, போலீஸ்காரர் லோகேஷ்வரன் ரவியை ஊருக்குள் நுழையக் கூடாது என பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்தார். மேலும், இவ்விவகாரம் தொடர்பாக, உயர் நீதிமன்ற விஜிலன்ஸ் பதிவாளர் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, உயர் நீதிமன்ற விஜிலன்ஸ் பதிவாளரின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை அறிக்கையை பார்வையிட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மாவட்ட முதன்மை நீதிபதிக்கு எதிராக போலீசாரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை, இது உறுதிப்படுத்துகிறது.
எனவே, விஜிலன்ஸ் பதிவாளரின் விசாரணை அறிக்கையை, உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளைக் கொண்ட விஜிலன்ஸ் குழுவின் நடவடிக்கைக்காக, பதிவுத் துறை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதி, தொடர்ந்து அதே இடத்தில் பணிபுரிவது உகந்ததாக இருக்காது என்பதால், அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்க, விசாரணை அறிக்கையை பணியிட மாற்றக் குழுவுக்கும் அனுப்ப வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.