காங்கிரசுக்கு எதிராக பேசும் கூட்டணி கட்சிகள்: பின்னணியில் இருந்து இயக்கும் தி.மு.க.,
காங்கிரசுக்கு எதிராக பேசும் கூட்டணி கட்சிகள்: பின்னணியில் இருந்து இயக்கும் தி.மு.க.,
UPDATED : பிப் 12, 2026 12:28 AM
ADDED : பிப் 12, 2026 12:27 AM

தொகுதி பங்கீடு பேச்சு நடத்துவதில் அவசரம் காட்டும் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு, கூட்டணி கட்சிகள் வாயிலாக தி.மு.க., நெருக்கடி கொடுத்து வருவதால், காங்கிரசார் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் சார்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டது. அது, தி.மு.க.,விடம் தொகுதி பங்கீடு குறித்து பேச திட்டமிடப்பட்டது. ஆட்சியில் பங்கு, 41 தொகுதிகள் என, காங்கிரசார் பொதுவெளியில் சொல்லும் நிபந்தனைகளை கேட்டு, தி.மு.க., கடும் கோபம் அடைந்துள்ளது. அதனால், காங்கிரஸ் கட்சியுடன் எந்த பேச்சுக்கும் முன்வராமல், மவுனம் சாதித்து வருகிறது.
இதற்கிடையில், எப்போதும் இல்லாத வகையில், இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமை, கூட்டணி விஷயத்தில் திடீர் நெருக்கடி கொடுப்பதை முறியடிக்க, தி.மு.க., திட்டமிட்டது. அதன்படி, கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், காங்கிரசுக்கு பதிலடி தரும் நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.
சமீபத்தில் தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில், 'தி.மு.க., கூட்டணிக்குள் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.,வை சேர்க்க, ராமதாஸ்,- திருமாவளவன் இருவரும் பேசினால் போதும்; வி.சி., நிலைப்பாடு நிச்சயம் மாறும்' என்றார்.
அவரது கருத்துக்கு, வி.சி., - எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.பாலாஜி எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில், 'கூட்டணியில் யார் யார் இடம் பெறுவர் என்பதை தி.மு.க., முடிவெடுக்கும். ' அதே நேரம், ஜாதியவாத, மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில் இருக்க மாட்டோம் எனும் நிலைப்பாட்டை, வி.சி., மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரிகமற்ற அரசியல் அணுகுமுறை' என கூறியிருந்தார்.
செல்வப்பெருந்தகை கருத்துக்கு, வி.சி., துணை பொதுச்செயலர் வன்னியரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'எங்கள் முடிவில் தலையிடுவது, நல்ல அரசியல் பண்பாக இல்லை' என்றார். இந்த விவகாரத்தில், தி.மு.க., எந்த கருத்தும் சொல்லாமல், காங்கிரசுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் சீறுவதை ரசித்தது.
அதன் தொடர்ச்சியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் சண்முகம் அளித்த பேட்டியில், 'வழக்கமாக கூட்டணிக்கு தலைமை வகிக்கக்கூடிய கட்சி தான் முதலில் பேச்சு நடத்த குழு அமைக்க வேண்டும். இந்த முறை தலைகீழாக நடக்கிறது. காங்., முதலில் குழு அமைத்துள்ளது' என்றார்.
இதே போலவே, இந்திய கம்யூ., கட்சியின் வீரபாண்டியனும், தி.மு.க., தரப்புக்கு ஆதரவாக சில தகவல்களை சொல்லி உள்ளார்.
தொகுதி பங்கீடு பேச்சு விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி தலைகீழாக செயல்படுகிறது என சண்முகம் விமர்சித்திருப்பது, காங்கிரசாருக்கு அதிருப்தியை அளித்துள்ளது.
இது குறித்து, தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'கூட்டணி கட்சிகளை ஏவிவிட்டு, காங்கிரசை விமர்சிக்க வைக்கும் தி.மு.க.,வின் செயல் அப்பட்டமாக தெரிகிறது. தி.மு.க.,வுக்காக எங்களை விமர்சித்தாலும், நாங்களும் கூட்டணி கட்சி தான் என்பதை அவர்கள் உணரவில்லை' என்றார்.
- நமது நிருபர் -

