யாருடன் கூட்டணி என அறிவிக்காமல் முடிந்துபோன பாமக பொதுக்குழு கூட்டம்
யாருடன் கூட்டணி என அறிவிக்காமல் முடிந்துபோன பாமக பொதுக்குழு கூட்டம்
UPDATED : பிப் 01, 2024 03:06 PM
ADDED : பிப் 01, 2024 01:57 PM

சென்னை: வரும் லோக்சபா தேர்தலில், தேசிய மற்றும் மாநில நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது எனவும், யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு வழங்குவது என பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பா.ம.க.,வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் நடந்தது. கட்சி நிறுவனர் ராமதாஸ், மாநில தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் தீர்மானங்களை கவுரவ தலைவர் ஜி.கே.மணி வாசித்தார். இந்த கூட்டத்தில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் சில:
*லோக்சபா தேர்தல், தமிழகத்தின் நலன்களை பாதுகாப்பதில் முக்கியமானது என பா.ம.க., கருதுகிறது.
*இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இயல்பாகவே மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்படுவதை உறுதி செயல்படுகிறது. அதற்கேற்ற வகையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் அமைக்கப்பட்டதன் நோக்கம் ஒட்டு மொத்த இந்தியாவின் அரசு நிர்வாகம் எந்த சிக்கலும் இல்லாமல் இயங்க வேண்டும் என்பதுதான். இதை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொண்டு செயல்படும் வரை யாருக்கும் பாதிப்பும் இல்லை.
*2024 லோக்சபா தேர்தலில் மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் தீர்மானிக்கிறது.
*எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரத்தை வழங்குகிறது. இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.
7 தொகுதிகளில் வெற்றி
முன்னதாக இந்த கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: முன்பை விட உறுதியாக இருக்கிறோம். உற்சாகமாக இருக்கிறோம். எதிர்வரும் லோக்சபா தேர்தலை சந்திக்க நாம் தயார் நிலையில் இருக்கிறோம். கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டால் கூட குறைந்தது 7 இடங்களில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். வெற்றி பெற முடியும். ஆனால், உங்கள் விருப்பம், தனித்து போட்டியிடக்கூடாது என்பதாகத் தான் இருக்கும் என நான் நினைக்கிறேன். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.