சிறுமி உயிரிழந்த விவகாரம்; 800 கிலோ காலாவதியான நூடுல்ஸ் பறிமுதல்
சிறுமி உயிரிழந்த விவகாரம்; 800 கிலோ காலாவதியான நூடுல்ஸ் பறிமுதல்
ADDED : செப் 03, 2024 05:24 PM

திருச்சி: அமேசான் ஆன்லைன் விற்பனை தளத்தில் இருந்து வாங்கிய சைனீஸ் புல்டாக் நூடுல்ஸை சமைத்து சாப்பிட்ட 15வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, திருச்சியில் மொத்த விற்பனையாளரிடம் 800 கிலோ காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், அமேசான் ஆன்லைன் தளத்தில் நூடுல்ஸ் வாங்கி வீட்டில் சமைத்து சாப்பிட்டுள்ளார். அடுத்த சில மணி நேரத்தில் அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ''அமேசான் ஆன்லைன் தளத்தில் விற்கப்படும் சைனீஸ் புல்டாக் நூடுல்ஸை வாங்கி சமைத்து சாப்பிட்டு உயிரிழந்தார். சைனா நூடுல்ஸ் மொத்த விற்பனையாளரிடம் இருந்து காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது'' என்றார்.
இந்த விவகாரத்தை அடுத்து, தமிழகத்தில் நூடுல்ஸ் விற்பனை, தயாரிப்பு கிடங்குகள் மற்றும் இதர இடங்களில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. நூடுல்ஸ் தயாரிக்கப்படும் பொருட்கள் தரச் சான்றிதழ் மற்றும் பேட்ச் ஆகியவை இடம் பெற்றுள்ளதா என ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டது. திருச்சியில் நூடுல்ஸ் மொத்த விற்பனையாளரிடம் 800 கிலோ காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.