அதிமுக கூட்டத்தில் புகுந்த நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்: இபிஎஸ் ஆவேசம்
அதிமுக கூட்டத்தில் புகுந்த நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்: இபிஎஸ் ஆவேசம்
ADDED : ஆக 19, 2025 09:41 AM

திருவண்ணாமலை: கலசப்பாக்கம், போளூர் தொகுதியில் அதிமுக கூட்டத்தில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் புகுந்ததால் அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் கோபம் அடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், போளூர் தொகுதியில் மக்களை சந்தித்து இபிஎஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நான் தொடர்ந்து பல கூட்டங்களில் கவனித்து வருகிறேன். கூட்டத்துக்கு நடுவில் வேண்டுமென்றே ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்யும் கேவலமான செயலை இந்த அரசாங்கம் செய்துவருகிறது. எத்தனை ஆம்புலன்ஸ் விட்டாலும் எதுவும் செய்யமுடியாது. தில்லு திராணி இருந்தால் அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும்.
தீமை செய்யும் ஆட்சி
மக்கள் கூட்டத்துக்கு இடையில் இப்படி வந்தால் மக்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் என்ன செய்வது? ஆம்புலன்ஸ்ல நோயாளி யாருமே இல்லாமல், வெறுமனே போகிறது. இதை 30 கூட்டத்தில் பார்த்துவிட்டேன். எதிர்க்கட்சியின் கூட்டம் நடக்கிறது என்றால் போலீசார் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இது குறித்து நாளை போலீசாரிடம் புகார் கொடுப்போம். மக்களுக்கு தீமை செய்யும் ஆட்சியாகத்தான் இருக்குது திமுக ஆட்சி. அதிமுக ஆட்சியின் திட்டங்களை எல்லாம் நிறுத்தியதுதான் திமுக சாதனை. நீங்க என்னென்ன திட்டங்களை நிறுத்தினீர்களோ, அந்த திட்டங்கள் எல்லாமே அடுத்த அதிமுக ஆட்சியில் தொடரும்.
அதிமுக ஆட்சியில் விவசாயத் தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள், ஆடு, மாடு, கோழி, உழவர் பாதுகாப்பு திட்டம் கொடுத்தோம். தேர்தல் வரும்போதெல்லாம் நாடகத்தை அரங்கேற்றும் கட்சி திமுக. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கொடுப்பதாக அறிவித்து கைவிட்டுவிட்டார், தூய்மைப் பணியாளர்களையும் அம்போவென விட்டுவிட்டார், ஆக தேர்தல் வந்தால் அழகழகாகப் பேசுவார்கள், ஆட்சிக்கு வந்ததும் மறந்துவிடுவார்கள். திமுக ஆட்சியில் போதைப் பொருள் பல வழிகளில் வந்துவிட்டது.
மக்கள் கட்சி, மக்கள் அரசு
இளைஞர்கள் சீரழியும் நிலை நிலவுகிறது. இத்தனைக்கும் முடிவுகட்டப்போகிறது 2026ம் ஆண்டு தேர்தல். அணைக்கட்டில் கலை அறிவியல் கல்லூரி, அகரம் கிராமத்தில் கலை அறிவியல் கல்லூரி, அணைக்கட்டு தாலுகா, அகரம் ஆற்றில் தடுப்பணை, ரயில்வே மேம்பாலம் என இந்த தொகுதிக்கு பல திட்டங்கள் கொடுத்தோம். அதிமுக மக்கள் கட்சி, மக்கள் அரசு. மக்களின் எண்ணத்துக்கு ஏற்றவாறு செயல்படும். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம். ஸ்டாலின் மாடல் அரசு பெயிலியர் மாடல் அரசு. இவ்வாறு இபிஎஸ் பேசினார்.