10 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க சட்ட திருத்த மசோதா தாக்கல்
10 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க சட்ட திருத்த மசோதா தாக்கல்
ADDED : டிச 10, 2024 05:11 AM

சென்னை : அனுமதி கட்டண அடிப்படையில் நடத்தப்படும், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு, உள்ளாட்சி அமைப்புகள், 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கவும், வசூலிக்கவும் வகை செய்யும் சட்ட மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில், தமிழக உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கைகள் வரி சட்டம், 2017 முதல் அமலில் உள்ளது.
அதில், கல்வி நிறுவனம் உள்ளிட்ட எந்த ஒரு நிறுவனத்தாலும், அனுமதி கட்டணத்துடன் நடத்தப்படும், இசை, நாடகம் மற்றும் காட்சி நிகழ்ச்சிகளுக்கு, கேளிக்கை வரி விதிக்க உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை.
எனவே, இசை, நாடகம், காட்சி நிகழ்ச்சிகளுக்கு, அனுமதி கட்டணம் மீது உள்ளாட்சிகள், 10 சதவீதம் கேளிக்கை வரி விதிப்பதற்கும், வசூலிப்பதற்கும் வகை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, தமிழக உள்ளாட்சி அமைப்புகள், கேளிக்கைகள் வரி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வழி செய்யும் சட்ட மசோதாவை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார்.
இதே போல, தமிழக வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சட்ட மசோதாக்கள், சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.
தமிழக தனியார் கல்லுாரிகள் ஒழுங்குமுறைப்படுத்துதல் தொடர்பாக, 2022ல் கொண்டு வரப்பட்ட சட்ட மசோதவை, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று திரும்ப பெற்றார்.
தமிழக உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கைகள் வரி சட்டத்திருத்த மசோதா, தமிழக வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்துதுல் சட்டத்திருத்த மசோதா ஆகியவற்றுக்கு, அ.தி.மு.க., தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.