ADDED : ஏப் 04, 2024 03:41 PM

மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்றும் (ஏப்.,4), நாளையும் மதுரை, சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. அதற்கடுத்து இன்று இரவு மதுரை வருவதாகவும், நாளை தென்காசி, கன்னியாகுமரி செல்ல உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. தற்போது அமித்ஷாவின் தமிழக வருகை மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று (ஏப்.,4) மதுரை வருவதாகவும், தேனி, ராமநாதபுரம், சிவகங்கைக்கு சாலை மார்க்கமாக சென்று ஆதரவு திரட்டுவதாகவும், மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 5ம் தேதி தென்காசி, கன்னியாகுமரியில் பா.ஜ மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் திடீரென அமித்ஷாவின் வருகை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே அமித்ஷா வருகையில் சிறிது மாற்றங்கள் செய்யப்பட்டு, இன்று இரவு தனி விமானம் மூலம் மதுரை வருவதாகவும், நாளை காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி சென்று 'ரோட் ஷோ' நடத்த இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த சுற்றுப்பயண திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ''தவிர்க்க முடியாத காரணத்தால் அமித்ஷாவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக'' போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

