அமித் ஷா தமிழக வருகை ஒத்திவைப்பு; பழனிசாமி முடிவுக்காக காத்திருப்பு
அமித் ஷா தமிழக வருகை ஒத்திவைப்பு; பழனிசாமி முடிவுக்காக காத்திருப்பு
UPDATED : டிச 10, 2025 05:46 AM
ADDED : டிச 10, 2025 05:45 AM

சென்னை: அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர்களை, கட்சியில் அல்லது கூட்டணியில் மீண்டும் இணைப்பது தொடர்பாக பழனிசாமியின் முடிவு தெரியாததால், கடந்த வாரம் தமிழகம் வர இருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. இதனால், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
முயற்சி
பா.ம.க.,வில் ராமதாஸ், அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள மோதலை சரி செய்து, ஒன்றிணைந்த பா.ம.க., மற்றும் தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில், பா.ஜ., மேலிட தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இரு கட்சிகளின் தலைவர்களையும், அமித் ஷா ஒரு முறை சந்தித்து பேசினால், அக்கட்சிகள் கூட்டணியில் சேர்ந்து விடும் என, அவருக்கு தகவல் சொல்லப்பட்டது.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில், தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோரை சேர்த்தால், தென் மாவட்டங்களில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு, அதிக இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அவர் கடந்த 7ம் தேதி, தமிழகம் வந்து, பா.ம.க., - தே.மு.தி.க., தலைவர்களை சந்தித்து பேசவும், தினகரன் மற்றும் பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்ப்பது குறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியுடன் ஆலோசிக்கவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர, ராமதாஸ் பிடி கொடுக்கவில்லை. இதன் பின்னணியில், தி.மு.க., இருப்பதாக, பா.ஜ., மேலிடத்துக்கு தகவல் சென்றுள்ளது.
வாய்ப்பு
இருந்தபோதும், ராமதாசுக்கு நெருக்கமானவர்கள் வாயிலாக, ராமதாசை, அமித் ஷா சந்தித்துப் பேசினால், அவரும் தே.ஜ., கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது என, பா.ஜ., தரப்பில் கட்சி மேலிடத்துக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல, தினகரன், பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்ப்பது குறித்து, இன்று சென்னையில் நடக்க உள்ள கட்சி பொதுக்குழுவில் ஆலோசித்துவிட்டு பதில் கூறுவதாக, பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அ.தி.மு.க., பொதுக்குழு முடிந்த பின், தமிழகம் வர அமித் ஷா முடிவு செய்துள்ளார். அதன் காரணமாகவே, கடந்த 7ம் தேதி, அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

