ADDED : ஜன 30, 2024 12:16 AM

சென்னை: சிவகங்கை மாவட்டம், பள்ளத்துாரில் உள்ள ஏ.எம்.எம்., மருத்துவமனை நுாற்றாண்டு விழாவில், விப்ரோ நிறுவன தலைவர் அசீம் பிரேம்ஜி, மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முருகப்பா குழுமம் சார்பில், 1924ல் சிவங்கை மாவட்டம், பள்ளத்துாரில் மருத்துவமனை துவங்கப்பட்டது.
இந்த மருத்துவமனை, முருகப்பா குழுமத்தின் ஏ.எம்.எம்., அறக்கட்டளை சார்பில், சி.எஸ்.ஆர்., எனப்படும் பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையின் நுாற்றாண்டு விழா, கடந்த 22ம் தேதி நடந்தது. நுாற்றாண்டு விழா கட்டடத்தை, விப்ரோ நிறுவன தலைவர் அசீம் பிரேம்ஜி திறந்து வைத்தார். இதில், சி.டி., ஸ்கேன் உள்ளிட்ட நவீன பரிசோதனை கருவிகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
முருகப்பா குழுமத்தின் கல்வி, மருத்துவ சேவைகளை விவரிக்கும், 'நுாற்றாண்டு கால சேவை' என்ற காபி டேபிள் புத்தகத்தை, அசீம் பிரேம்ஜி வெளியிட, ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டார்.
விழாவில் பேசிய முருகப்பா குழுமங்களின் முன்னாள் தலைவர் சுப்பையா, ''1924ல் என் தாத்தா பள்ளத்துாரில் மருத்துவமனை துவங்கினார். அவர் விதைத்த விதை இன்று ஏ.எம்.எம்., அறக்கட்டளை என்ற மரமாக வளர்ந்துள்ளது,'' என்றார்.
அசீம் பிரேம்ஜி பேசுகையில், ''மாற்றங்கள் நடக்கும் என காத்திருக்காமல், நம் சமூகத்திற்கு தேவையான வசதிகளை நாமே செய்ய வேண்டும். அதை நுாறாண்டுகளுக்கு முன்பே முருகப்பா குழுமம் செய்துள்ளது,'' என்றார்.
ஏ.எம்.எம்., அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அழகப்பன், மீனாட்சி முருகப்பன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.