ஆவினுக்கு போட்டியாக களமிறங்கியது அமுல்: 2 மாதங்களில் விற்பனைக்கு வருகிறது பால்
ஆவினுக்கு போட்டியாக களமிறங்கியது அமுல்: 2 மாதங்களில் விற்பனைக்கு வருகிறது பால்
ADDED : மே 08, 2024 06:42 AM

சென்னை: ஆவினுக்கு போட்டியாக தயிர், பனீர் விற்பனையில் இறங்கியுள்ள அமுல் நிறுவனம், இரண்டு மாதங்களில், பால் விற்பனையை துவக்க திட்டமிட்டு உள்ளது.
தமிழக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமான ஆவின் வாயிலாக, பால் மட்டுமின்றி, 230க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல, குஜராத் மாநில பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமான அமுல் வாயிலாகவும், பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்தில், கூட்டுறவு நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது நடைமுறையில் உள்ளது. அதன்படி, அமுல் நிறுவனத்தின் பால் பொருட்கள் தமிழகம் முழுதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், ஒரு மாநில பால் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு போட்டியாக, மற்றொரு மாநில பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது இல்லை.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பால் பாக்கெட் தொழிற்சாலையை அமுல் நிறுவனம் அமைத்து வருகிறது. இங்கிருந்து பால், தயிர், பனீர் உள்ளிட்ட பொருட்களை, தமிழகம் முழுதும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள், 2023ல் துவங்கின. இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அமுல் நிறுவனம் பால் விற்பனையில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்தும்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதனால், பால் கொள்முதலை அமுல் நிறுவனம் துவங்கவில்லை. ஆனாலும், கிருஷ்ணகிரியில் பால் பண்ணை கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், பால் விற்பனையை துவங்குவதற்கு அமுல் நிறுவனம் மீண்டும் மும்முரம் காட்ட துவங்கியுள்ளது. முதற்கட்டமாக, ஆவினுக்கு போட்டியாக தயிர், பனீர், யோகர்ட், லஸ்ஸி விற்பனையை அமுல் நிறுவனம், 'டீலர்'கள் வாயிலாக துவங்கியுள்ளது. இதற்கான கிடங்கு, செங்குன்றம் அருகே அமைக்கப்பட்டு உள்ளது.
இரண்டு மாதங்களில் சித்துார் பால் பண்ணையில் இருந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், பால் விற்பனையை துவங்குவதற்கு அமுல் முடிவெடுத்துள்ளது. சென்னையில் நாள்தோறும் 14.5 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனையாகும் நிலையில், அமுல் வரவால் ஆவின் விற்பனை முடங்கும் வாய்ப்புள்ளது.

