கடலில் ஒரு கலக்கல் சுற்றுலா குருசடை தீவுக்கு படகு சவாரி
கடலில் ஒரு கலக்கல் சுற்றுலா குருசடை தீவுக்கு படகு சவாரி
ADDED : ஜன 16, 2024 01:15 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து மன்னார் வளைகுடா கடலில் உள்ள குருசடை தீவுக்கு வனத்துறையின் படகில் ஜாலியாக இன்பச் சுற்றுலா செல்ல பயணிகள் குவிகின்றனர்.
ராமேஸ்வரம் அருகே பாம்பன் முதல் துாத்துக்குடி வரை மன்னார் வளைகுடா கடலில் 560 சதுர கி.மீ., பரப்பில் 21 தீவுகள் உள்ளன. இத்தீவுகளை சுற்றிலும் டால்பின்கள், கடல் பசுக்கள், கடல் ஆமைகள், கடல் குதிரைகள் உள்ளிட்ட 460 வகையான அரிய கடல் வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன.
இந்த தீவுகளைச் சுற்றி வளரும் பவளப்பாறைகள் தீவுகளுக்கு மட்டுமின்றி ராமேஸ்வரம் தீவுக்கே பாதுகாப்பு அரணாக உள்ளது. 1980 முதல் இத்தீவுகளை தேசிய கடல் பூங்காவாக மத்திய அரசு அறிவித்த பின் 21 தீவுகளிலும் மீனவர்களோ, வெளி நபர்களோ தங்கி மீன்பிடிக்க வனத்துறை தடை விதித்தது.
தீவுகளைப் பாதுகாக்க மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவிடுகிறது. மண்டபம், கீழக்கரை, துாத்துக்குடி வனத்துறையினர் ஒரு சில தீவில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், படகு மூலமும் கண்காணித்து வருகின்றனர். இதனால் அரிய உயிரினங்களும், தீவின் இயற்கை சூழலும் பாதுகாப்பாக உள்ளது.
குருசடை தீவு சுற்றுலா:
மன்னார் வளைகுடா கடலில் 20வது தீவான குருசடை தீவு கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்க பூமியாக விளங்கியது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு உயிரியல் ஆய்வுக் கூடம் இருந்தது. இதனால் வனத்துறை அனுமதியுடன் உயிரியல் ஆராய்ச்சியில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின் சில காரணங்களுக்காக உயிரியல் பூங்கா ஆய்வுக்கூடம் அகற்றப்பட்டு மாணவர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
தற்போது குருசடை தீவுக்கு படகில் சுற்றுலா செல்ல வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
2022 மார்ச்சில் ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து சுற்றுலாப் படகு சவாரியை வனத்துறை துவக்கியது. ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகள் பாம்பன் குந்துகாலில் உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை கண்டு ரசித்து அங்கிருந்து 1.5 கி.மீ., துாரம் படகில் சவாரி செய்து குருசடை தீவில் உற்சாகமாக இறங்குகின்றனர்.
*வரவேற்கும் டால்பின்கள் :
படகில் குருசடை தீவுக்கு செல்லும் போது டால்பின்கள் துள்ளி குதித்து விளையாடுவதும், கடலில் படர்ந்து கிடக்கும் அழகிய பவளப்பாறைகள் சுற்றுலா பயணிகளை வரவேற்பதுடன் கடல் உலகத்திற்கே அழைத்துச் செல்லும் அனுபவம் ஏற்படுகிறது.
தீவில் இறங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு டால்பின்களின் தத்ரூப சிலைகள், சுகாதாரமான காற்று, சுற்றுச்சூழல், அழகிய கடற்கரை கவர்கிறது.
வாகன நெரிசல், புகை, சத்தம் இவற்றில் இருந்து விலகி மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி பெற வாருங்கள் குருசடை தீவு சுற்றுலாவுக்கு...