அன்பழகனின் மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது : புதிய தலைமைச் செயலக வழக்கில் அரசு பதில்
அன்பழகனின் மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது : புதிய தலைமைச் செயலக வழக்கில் அரசு பதில்
ADDED : ஆக 03, 2011 08:16 PM

சென்னை : 'புதிய தலைமைச் செயலகம் கட்டுமானம் குறித்த விசாரணை கமிஷனை எதிர்த்து முன்னாள் அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்த மனு, அரசியல் உள்நோக்கம் கொண்டது' என சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு பதிலளித்துள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, ஓமந்தூரார் வளாகத்தில் புதியதாக தலைமைச் செயலகம் கட்டப்பட்டது.
இதன் கட்டுமானத்தில் முறைகேடுகள் நடந்ததா என்பதை கண்டறிய, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தங்கராஜ் தலைமையில் விசாரணை கமிஷனை, புதிய அரசு அமைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் அன்பகழகன், மனு தாக்கல் செய்தார்.
இம்மனு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்க, அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, விசாரணை 4ம் தேதிக்கு (இன்று) தள்ளிவைக்கப்பட்டது. அன்பழகன் மனுவுக்கு, தமிழக அரசின் தலைமைச் செயலர் தாக்கல் செய்த பதில் மனு:
இம்மனு விசாரணைக்கு உகந்ததல்ல. முறைகேடுகளை, சட்டவிரோத அம்சங்களை விசாரிப்பதை தடுக்கும் நோக்கில், ஐகோர்ட்டை மனுதாரர் அணுகியுள்ளார். விசாரணை செய்து அரசுக்கு தகவல் அளிக்கும் நோக்கில் தான், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணை கமிஷன், தீர்ப்பு கூறப் போவதில்லை. பொது நலன் பாதிக்கப்படுவதாக மனுதாரர் கருதுவதில் எந்த அடிப்படையும் இல்லை.
ஐகோர்ட் வகுத்த விதிமுறைகளை கடைபிடிக்காமல், மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த வழிமுறைகளையும் பின்பற்றவில்லை. மனுதாரரின் தகுதி சந்தேகத்துக்குரியது. மனுதாரர் சார்ந்துள்ள கட்சியானது, சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்துள்ளது. யார் நலன்களுக்காக இந்த பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது என்கிற விவரங்கள் மனுவில் இல்லை.
கடந்த அமைச்சரவையில் நிதியமைச்சராக மனுதாரர் பதவி வகித்தார். புதிய தலைமைச் செயலக கட்டுமானத்தில் நிதி முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த விஷயத்தில் மனுதாரருக்கு நேரடி தொடர்பு இருப்பதால், அது குறித்து விசாரிக்கப்படும். எனவே, இம்மனுவை தாக்கல் செய்ய அவருக்கு உரிமையில்லை.
ஒரு விஷயத்தில் நேரடியாக, தனிப்பட்ட நலன் இருக்கும் நபர், பொது நல மனு என்கிற போர்வையில் கோர்ட்டை அணுக அனுமதியில்லை. அரசியல் விரோதத்தை தீர்த்துக் கொள்ளும் வகையில், விசாரணை கமிஷனின் நடவடிக்கையை தடுக்கும் வகையில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகள் குறித்து உண்மைகள் வெளிவருவதை தடுக்கும் வகையில், அரசியல் உள்நோக்கம் கொண்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை கமிஷன் சட்டப்படி தான், இந்த கமிஷன் அமைக்கப்பட்டது. மனு விசாரணைக்கு உகந்ததல்ல, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கு 'முதல் பெஞ்ச்' முன் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.