சேலம் பெரியார் பல்கலையை தனியார்மயமாக்க திட்டம் அன்புமணி குற்றச்சாட்டு
சேலம் பெரியார் பல்கலையை தனியார்மயமாக்க திட்டம் அன்புமணி குற்றச்சாட்டு
ADDED : மே 04, 2025 03:30 AM

சென்னை: சேலம் பெரியார் பல்கலையை தனியார்மயமாக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
சேலம் பெரியார் பல்கலையில், பி.டெக்., - பி.எஸ்.சி., 'இம்மெர்சிவ்' தொழில்நுட்பம் புதிய பட்டப் படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பல்கலைக்கு அதிகாரம் இல்லாத பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை நடத்துவது, மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் செயல்.
கலை, அறிவியல் பல்கலையான பெரியார் பல்கலை, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, பொறியியல், தொழில்நுட்ப படிப்புகளை நடத்துவது சட்ட விரோதமும், சமூக அநீதியுமாகும். அது மட்டுமல்லாது, பல்கலைகளில் இளநிலை பட்டப்படிப்புகளை நடத்த இயலாது.
இம்மெர்சிவ் தொழில்நுட்பம் படிப்பை நடத்த, இப்பல்கலைக்கு அனுமதி இல்லை என, இரண்டு ஆண்டுகளுக்கு முன், அன்றைய உயர் கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்தார். இந்நிலையில், அதே படிப்பை நடத்த, இப்போது அனுமதிப்பது எப்படி என்பதற்கு, அரசு பதிலளிக்க வேண்டும்.
தனியார் நிறுவனங்களுடன் இணைந்து படிப்புகளை நடத்தினால், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பர். அதில் ஒரு பகுதியை பல்கலைக்கு வழங்கிவிட்டு, மீதமுள்ள தொகையை நிறுவனம் எடுத்துக் கொள்ளும். அதற்காக பல்கலை பெயரையும், கட்டமைப்பு வசதிகளையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும். இத்தகைய அநீதியான முறை அனுமதிக்கப்பட்டால், அரசு பல்கலைகள் படிப்படியாக தனியார்மயமாக்கப்படும்.
எனவே, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, சேலம் பல்கலை அதிக கட்டணத்தில் பட்டப் படிப்புகளை நடத்துவதை தடை செய்ய வேண்டும். இதுகுறித்து, உரிய விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.