அன்புமணி கூட்டணி பேசுவது நீதிமன்ற அவமதிப்பு; ராமதாஸ் காட்டம்
அன்புமணி கூட்டணி பேசுவது நீதிமன்ற அவமதிப்பு; ராமதாஸ் காட்டம்
ADDED : ஜன 08, 2026 12:14 PM

விழுப்புரம்: அன்புமணி கூட்டணி பேசுவது நீதிமன்ற அவமதிப்பு. என் தலைமையில் தான் கூட்டணி பற்றி பேச முடியும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நிருபர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது: அன்புமணி பாமக சார்பில் கூட்டணி பேசுவது நேற்று நடந்த கூத்து. கூட்டணி பேசுவது நீதிமன்ற அவமதிப்பு. இது உங்களுக்கு எல்லாம் தெரியும்.
ஒரு முக்கியமான செய்தியை சொல்கிறேன். என் தலைமையில் தான் கூட்டணியை பேச முடியும்.நான் அமைக்கிற கூட்டணி தான், நான் இருக்கும் கூட்டணி தான், நான் சேரும் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். அதனால் நேற்று நடந்தது ஒரு கூத்து, நாடகம்.
அடாவடி
இந்த நாடகத்தை தமிழக மக்கள் பார்த்து, ஏன் இப்படி இந்த பிள்ளை வயதான தந்தைக்கு எதிராக இப்படி செய்கிறார். எவ்வளவு பாடுபட்டு அவரை படிக்க வைத்தார், மந்திரி ஆக்கினார், ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்தார், கட்சியின் தலைமை பொறுப்பையும் கொடுத்தார்.
ஆனால் தந்தைக்கு எதிராக இவ்வளவு கேவலமாக இந்த பிள்ளை நடந்து கொள்கிறார்? தந்தை இருக்கும் வரை ராமதாஸ் தலைமை தாங்கி இருக்கலாமா? அதை தான் ராமதாஸ் செய்து இருக்கிறார். இவர் செய்வது அடாவடி, இப்படி யாரும் செய்ய முடியாது. செய்யக் கூடாது என்று எல்லாம் மக்கள் ஆங்காங்கே பேசி கொள்வதை கேட்க முடிகிறது.
மோசடி பேர்வழி
என்னிடமும் வந்து சொல்கிறார்கள். என்னிடம் இருந்து கட்சியை பறிப்பதற்கு சதித்திட்டம் தீட்டி சூழ்ச்சியோடு அன்புமணி செயல்படுவதை மக்கள் அறிவார்கள். யாருடன் கூட்டணி என்பது குறித்து இரண்டு நாட்களில் அறிவிப்பேன்.
அன்புமணி ஒரு மோசடி பேர்வழி; அன்புமணி யாருடன் கூட்டணி வைத்தாலும் அது செல்லாது.
நான் செய்த சத்தியத்தை மீறி அன்புமணியை கட்சியில் இணைத்து மத்திய அமைச்சராக்கினேன். அவரே எனக்கு இப்படி ஒரு வேட்டு வைப்பார் என நினைக்கவில்லை. தந்தைக்கு துரோகம் செய்தவருக்கு மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

