ADDED : டிச 16, 2025 07:19 AM

சென்னை: ''மனசாட்சி இல்லாத மனிதராக மாறிவிட்டார் அன்புமணி,'' என, பா.ம.க., கவுரவத் தலைவர் ஜி.கே.மணி குற்றம்சாட்டினார்.
அவர் அளித்த பேட்டி: 'வரும் 2026 ஆகஸ்ட் வரை, பா.ம.க., தலைவராக அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக கடிதம் கொடுத்ததால், அதை ஏற்றுக்கொண்டோம். வேண்டுமானால் சிவில் நீதிமன்றத்தை அணுகலாம்' என, டில்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் கூறிவிட்டது.
எனவே, தலைவர் பதவி இல்லை. ஆனாலும் நான்தான் தலைவர் என அன்புமணி கூறி வருகிறார். 'துரோகிகள் இருக்கும் வரை, ராமதாசுடன் சேர முடியாது' என, அவர் கூறுகிறார்.
அப்பாவையும், மகனையும் பிரித்து விட்டதாக என் மீது குற்றம் சாட்டுகிறார். அவரை மத்திய அமைச்சராக்க, ராமதாசிடம் வாதிட்டவன் நான்.
ராமதாசும், அன்புமணியும் சேருவதாக இருந்தால், யார் துரோகிகள் என்று அன்புமணி சொல்கிறாரோ, அவர்கள் அனைவரும் கட்சியிலிருந்து விலகி கொள்கிறோம். நான் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்கிறேன். நானும், என் மகனும் எந்தப் பதவிக்கும் வர மாட்டோம்.
நிறுவனரான ராமதாசுக்குத்தான், பா.ம.க.,வில் அனைத்து அதிகாரமும் உள்ளது. கட்சியில் இவ்வளவு பிரச்னை இருக்கும்போது, அன்புமணி விருப்ப மனு வாங்குகிறார். இது ஏமாற்று வேலை.
ராமதாசை நாங்கள் ராஜாவாக பார்க்கிறோம். அவரது மகன் அன்புமணி, ராஜா வீட்டு கன்றுக்குட்டி. அது எட்டி தான் உதைக்கும்.
இதுநாள் வரை, சீறிப்பாயும் என நினைத்து பொறுத்துக் கொண்டிருந்தோம்.
பா.ம.க.,வுக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண ராமதாசும், அன்புமணியும் சந்தித்து பேச வேண்டும். ராமதாஸ் உடன் இருப்பதால் தான், அன்புமணி என்னை வசைபாடுகிறார்.
ராமதாசிடம் இருந்து கட்சியை பிரித்துக் கொண்டு போகப் பார்க்கிறார். அப்பாவுடன் இணைந்து செயல்பட்டால் பிரச்னையே இருக்காது. மனசாட்சி இல்லாத மனிதராக, அன்புமணி மாறிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

