அன்புமணிக்கும், பா.ம.க.,விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை: ராமதாஸ்
அன்புமணிக்கும், பா.ம.க.,விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை: ராமதாஸ்
ADDED : டிச 10, 2025 06:11 AM

திண்டிவனம்: 'பா.ம.க., நான் உருவாக்கிய கட்சி, அதன் கொடி, சின்னத்தை வேறு ஒருவர் பயன்படுத்த உரிமை கிடையாது' என ராமதாஸ் தெரிவித்தார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் அவர் அளித்த பேட்டி:
தேர்தல் கமிஷனை எதிர்த்து, இதுவரை எந்த அரசியல் கட்சியும் வழக்கு தொடர முன்வந்ததில்லை. ஆனால், பா.ம.க.,வுக்கு எதிராக துரோகம் இழைக்கப்பட்டதால், வேறு வழியின்றி வழக்கு தொடர்ந்துள்ளோம்.
தேர்தல் கமிஷனிடம், எங்கள் சார்பில் பலமுறை முறையிட்டும் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், எங்கள் உரிமையை வலியுறுத்தி, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம்.
இந்த வழக்கில், எங்கள் தரப்பையே பா.ம.க., என தேர்தல் கமிஷன் உறுதி செய்துள்ளது.
நான் உருவாக்கிய கட்சி தான் பா.ம.க., அதனால், கட்சியின் கொடியையும், சின்னத்தையும் வேறு ஒருவர் பயன்படுத்த உரிமை கிடையாது.
நான் பலமுறை அன்புமணியிடம் சொல்லியிருக்கிறேன். 'நீ வேண்டுமென்றால் புதிய கட்சியை ஆரம்பித்துக் கொள்' என்று தெள்ளத்தெளிவாக சொல்லி விட்டேன்.
தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டு கேட்கும் கருவி வைத்தது தொடர்பாக புகார் கொடுத்தும், சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடிக்கவில்லை.
ஒட்டு கேட்கும் கருவி வைத்தவர் யார் என்று கண்டுபிடிப்பதற்காக, தனியார் துப்புறியும் நிறுவனத்தை நியமித்தோம்; அதையும் விலைக்கு வாங்கி விட்டனர்.
என்னைப்பற்றி பேசுவதற்கு அன்புமணிக்கு எந்த உரிமையும் கிடையாது. தேர்தல் கமிஷன் டில்லி கோர்ட்டில் தெளிவாக கூறியபின், இனி என் பெயரையோ, போட்டோவையோ அன்புமணி பயன்படுத்தக் கூடாது.
தேவையானால், 'ஆர்' என்ற இன்ஷியலை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பவும் அன்புமணியிடம் கேட்டுக் கொள்வதெல்லாம், 'புதிய கட்சியை ஆரம்பி அல்லது வேறு ஒரு கட்சியில் இணைந்து விடு' என்பதே. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

