பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனே இழப்பீடு அன்புமணி வலியுறுத்தல்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனே இழப்பீடு அன்புமணி வலியுறுத்தல்
ADDED : ஜன 31, 2025 08:02 PM
சென்னை:'உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பாலாற்றில் விடப்படும், தோல் தொழிற்சாலை கழிவுநீரால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உடனே இழப்பீடு வழங்க வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
பாலாற்றில் விடப்படும், தோல் தொழிற்சாலை கழிவுநீரால் பாதிக்கப்பட்ட, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மக்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2001, 2009ம் ஆண்டுகளில் அறிவித்த இழப்பீடை, அடுத்த ஆறு வாரங்களில் வழங்க வேண்டும். தோல் தொழிற்சாலை கழிவுநீரால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் கண்காணிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், குழு அமைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு.
ஆனால், தோல் தொழிற்சாலை கழிவுகளில் இருந்து, வேலூரையும், பாலாற்றையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம், தமிழக ஆட்சியாளர்களுக்கு சிறிதும் இல்லை. இதனால்தான் பாலாறு பாழாறு ஆகி விட்டது.
தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் பக்கம், ஆட்சியாளர்கள் நின்றதுதான், அனைத்து தீமைகளுக்கும் காரணம்.
பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் விடுவோரை, டில்லி திஹார் சிறையில் அடைப்போம் என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பாலாற்றை காக்கும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறது என்பதை, தமிழக ஆட்சியாளர்கள் உணர வேண்டும். எனவே, இனியும் தாமதிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதற்கான தொகையை, தோல் தொழிற்சாலைகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், தமிழக அரசு குழு அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.