ADDED : நவ 29, 2024 07:58 PM
சென்னை:'மின் துறை மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் மின் கட்டணம், கடந்த இரு ஆண்டுகளில், 41,000 கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்பின்பும், மின் வாரியம் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறது. இதற்கு மின் வாரியத்தில் நிலவும், ஊழல் மற்றும் முறைகேடுகள்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் 17,340 மெகாவாட் அளவுக்கு மின் தயாரிப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, 18 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. இவை செயல்படுத்தப்பட்டிருந்தால் தமிழக மின் வாரியம், தனியாரிடம் அதிக விலை கொடுத்து, மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு மெகாவாட் அளவுக்கு கூட, அனல் மின் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.
தமிழகத்தில் மிக அதிக அளவில் ஊழல் நடக்கும் துறைகளில், மின்துறை முதன்மையானது. அதானியிடமிருந்து மின்சாரம் வாங்குவதில் துவங்கி, அனைத்து நிலைகளிலும் ஊழல் தலை விரித்தாடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..