ஆந்திரா விவசாயிகள் உஷார் தமிழக விவசாயிகள் துாக்கம்
ஆந்திரா விவசாயிகள் உஷார் தமிழக விவசாயிகள் துாக்கம்
ADDED : மே 15, 2025 02:00 AM
சென்னை:ஆந்திராவில் இருந்து பச்சை பயறு எடுத்து வந்து, தமிழக ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்வதை தடுக்க, வேளாண் வணிகப்பிரிவு வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், விவசாயிகள் நெல்லுக்கு மாற்றாக பச்சை பயறு சாகுபடி செய்கின்றனர். இவற்றை, விவசாயிகளிடம் இருந்து, குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
அதன்படி, 'நாபெட்' எனப்படும் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் வாயிலாக, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பச்சை பயறு கொள்முதல் செய்யப்படுகிறது.
இங்கு, 100 கிலோ எடையுள்ள பச்சை பயறு மூட்டை 8,682 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. வெளி சந்தையில் தற்போது 6,000 முதல் 6,500 ரூபாய்க்கு மட்டுமே பச்சை பயறு விலை போகிறது.
ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில், பச்சை பயறுக்கு நல்ல விலை கிடைப்பதை அறிந்து, ஆந்திர விவசாயிகள் உஷார் அடைந்தனர்.
தமிழக எல்லையோரம் உள்ள ஆந்திர கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்த பச்சை பயறை, தமிழக ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு கொண்டு வந்து, அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கின்றனர்.
அம்மாநில விவசாயிகள் மட்டுமின்றி, கமிஷன் ஏஜன்டுகளும் அதிக அளவில் பச்சை பயறுடன் வர துவங்கி உள்ளனர். இதனால், தமிழக விவசாயிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது.
அவர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பியதை தொடர்ந்து, ஆந்திராவில் இருந்து பச்சை பயறு எடுத்து வந்து விற்பதை தடுக்க, வேளாண் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து, வேளாண் வணிகப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழக எல்லையோர, ஆந்திர கிராமங்களில் இருந்து, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு பச்சை பயறு விற்பனைக்கு வருவது தெரிய வந்துள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், கிராம அளவில் பச்சை பயறு சாகுபடி செய்யப்பட்டுள்ள விபரம், வேளாண் வணிகப்பிரிவு வாயிலாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த பட்டியலில் இடம் பெறாத கிராமங்களில் இருந்து, தகுந்த வேளாண் அலுவலரின் சான்றிதழ் இல்லாமல், பச்சை பயறு கொண்டு வந்தால், அது கொள்முதல் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நோட்டீஸ் வாயிலாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.